2 மணி நேரமே தூக்கம்.. ஸ்டாலின் சொல்லை ஒருநாளும் மறுத்ததே கிடையாது.. செந்தில் பாலாஜி சொன்ன பதில்!
கோவை: சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் தொடங்கிய பின் ஒருநாளில் 2 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை பிரச்சாரம் செய்வதாக கூறிய செந்தில் பாலாஜி, வேலை என்று வந்துவிட்டால் அதனை செய்து முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டும் இருக்கிறது. இந்த முறை கொங்கு மண்டலத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் திமுக தலைமை செந்தில் பாலாஜியை கோவை தெற்கு தொகுதியில் களமிறக்கி இருக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் வீடு வீடாக சென்று செந்தில் பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் கோவையின் 4 தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருப்பதாக சில கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் தனியார் இதழுக்கு செந்தில் பாலாஜி அளித்துள்ள பேட்டி சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. அதில் செந்தில் பாலாஜி பேசுகையில், காலை 7 மணிக்கு என்னுடைய பிரச்சாரம் தொடங்கிவிடும். இரவு 11 மணி வரை பிரச்சாரத்தில் இருக்கிறோம்.
எங்களுக்கு ஓய்வு என்பதே இல்லை.. வேலை என்று வந்துவிட்டால், அதனை செய்து முடிக்க வேண்டும். அப்படியே பழகிவிட்டோம்.. சாதாரண நாட்களில் 4 மணி நேரம் தூங்குவோம்.. தேர்தல் நேரத்தில் 2 மணி தான் தூங்குகிறோம். இன்னும் 2 நாட்கள் தான் வாக்குப்பதிவிற்கு இருக்கிறது.. அதன்பின் ஓய்வு எடுத்து கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2021ல் கோவையின் அத்தனை தொகுதிகளையும் எதிர்க்கட்சி கைப்பற்றியது. அதனால் பொறுப்பு அமைச்சராக என்னை நியமித்தார்கள். அதனால் பணியாற்றினேன். இந்த முறை கரூரில் போட்டியிடவே விருப்ப மனு கொடுத்திருந்தேன். ஆனால் தேர்தல் களத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டால், நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். 2021 சட்டசபைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து கரூர் தொகுதிக்கு வந்தேன். அரவக்குறிச்சி பாதுகாப்பான தொகுதிதான். இருந்தும் கரூர் தொகுதியில் போட்டியிட்ட போது, மக்கள் என்னை வெற்றிபெற வைத்தார்கள். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஏராளமான திட்டங்களை கோவைக்கு கொடுத்துள்ளது.
ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டங்களை திமுக கொண்டு வந்திருக்கிறது. செம்மொழி பூங்கா, பெரியார் அறிவுலகம், ஹாக்கி மைதானம், டிஜி நாயுடு மேம்பாலம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த தேர்தலில் கோவையில் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். தேர்தல் களத்தில் மோதி தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications