10 வருஷம் துப்பாக்கி பிடிச்ச கை.. என் நேர்மைய கொச்சைப்படுத்தினா சும்மா விடமாட்டேன்.. அண்ணாமலை ஆவேசம்
கோவை: 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் சும்மா விடமாட்டேன் என சி.வி.சண்முகம் பேச்சுக்கு ஆவேசமாக எதிர்வினை ஆற்றியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சனாதனம் பற்றிப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதில் பங்கேற்ற அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்தும் சமீபத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா குறித்து சில கருத்துகளைத் தெரிவித்தார். இது மிகப் பெரியளவில் சர்ச்சையானது. இதற்கு அதிமுகவில் இருந்து கடும் எதிர்வினை எழுந்து வருகிறது.

அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், "தமிழ்நாட்டில் இருந்து தேசிய கட்சிகளை விரட்டி அடித்துள்ளோம். தமிழ்நாடு என்றால் இது திராவிட இயக்கம் நிறைந்த ஒரு மாநிலம். இங்கே தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்று விரட்டி அடித்து 56 ஆண்டுகள் ஆகிறது. அதற்குக் காரணகர்த்தா பேரறிஞர் அண்ணா. இன்று மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையை அயரன் செய்து போட்டு உட்கார்ந்து இருக்கிறோம் என்றால் அதைக் கொடுத்தவர் அண்ணா.
பெரும் செல்வந்தர்கள் மட்டுமே எம்பி, எம்எல்ஏவாக முடியும் என்ற சூழல் இருந்தது. அந்த நிலையை மாற்றி.. சாதாரண நபர்கள், மாற்று வேட்டி கட்ட இயலாதவர்களை எல்லாம் சட்டசபை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி அழகு பார்த்தவர் அண்ணா. 1967இல் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது. அத்தனை வேலைவாய்ப்பு படிப்பு என அத்தனையும் அந்த 6% மக்களுக்கே கிடைத்தது. சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்திலும் அவர்களே இருந்தார்கள். அதை மாற்றி அனைவருக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தந்தவர் அண்ணா.
அப்படிப்பட்ட அண்ணாவை அண்ணாமலை விமர்சித்திருக்கிறார். தமிழ்நாட்டை வளர்த்தெடுத்த அண்ணா குறித்துப் பேச உங்களுக்கு எந்தவொரு தகுதியும் இல்லை. கூட்டணியில் இருந்து கொண்டு இப்படிப் பேசுவதை ஏற்க முடியாது. முதலில் ஜெயலலிதாவை விமர்சித்தார். இப்போது அண்ணாவை விமர்சிக்கிறார். அவர் தெரியாமல் பேசவில்லை. அண்ணாமலை திட்டமிட்டு அண்ணாவைத் தரம் தாழ்ந்து பேசியுள்ளார். கூட்டணியில் இருந்து கொண்டே இப்படி பேச்சுவதை பார்த்தால் உள்நோக்கத்தோடு திமுகவுடன் இணைத்துச் செயல்படுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
அண்ணாவைப் பற்றி பேச பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. ஐபிஎஸ் படித்துவிட்டோம் என்ற திமிரிலும், ஆணவத்திலும் பேசக்கூடாது. அவர் செல்வது பாத யாத்திரையா வசூல் யாத்திரையா என்று தெரியவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. 'நானும் ரவுடிதான்' என்பது போல தன் இருப்பை காட்டிக்கொள்ளவதற்காக அண்ணாமலை செயல்படுகிறார் என ஆவேசமாக பேசினார் சி.வி.சண்முகம்.
இந்நிலையில் இன்று கோவையில் செய்தியார்களை சந்தித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அப்போது அண்ணாமலை மேற்கொள்வது பாத யாத்திரை அல்ல, வசூல் யாத்திரை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "இதற்கு முன்பு மந்திரிகளாக இருந்து வசூல் செய்து பழக்கப்பட்டு இருந்தார்கள். அதனால் அவர்கள் இதை வசூலாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு வசூல் செய்து தான் பழக்கம்.
அவர்கள் மந்திரிகளாக இருந்ததே வசூல் செய்வதற்காகத்தான். அதனால் நடைபயணம் சென்றால் வசூலுக்காக என்று நினைத்துக் கொள்கிறார்கள். இந்த டிஎன்ஏ மாற்ற முடியாது. நேர்மையாக அரசியல் செய்பவர்களுக்கு மட்டும்தான் நான் பேசும் அரசியல் புரியும். வசூல் செய்து மந்திரிகளாக இருந்தவர்களுக்கு நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் கூட தெரியாது. யார் பேசினாலும் பேசட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். பாஜகவின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு பேசுகிறார்.
தனிக்கட்சி, தனிக் கொள்கை, சனாதனம் எங்கள் உயிர் மூச்சு. அதற்காக பேச முடியவில்லை என்றால் நான் எதற்காக இந்த இருக்கையில் அமர வேண்டும்? பெரியார் அடி வாங்கியதை கூற முடியும், அப்போது அதிமுகவின் எம்எல்ஏக்கள் இருந்ததை கூற முடியும். அதையெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை.
என்னை செருப்பால் அடித்தால் கூட பொறுத்துக் கொள்வேன்; ஆனால், எனது நேர்மையை குறை சொன்னால் சும்மா விடமாட்டேன். அண்ணாதுரையை நான் தவறாக சொல்லவில்லை, சரித்திரத்தில் இருந்ததை எடுத்துக் கூறியிருக்கிறேன். நான் யாருடைய அடிமையும் கிடையாது. கும்பிடு போட்டுக்கொண்டு அவர்கள் கூறுவதை கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்றொரு கட்சியை தாழ்த்திதான் பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதில்லை.
நல்ல போலீஸை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது. சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். அதற்கு முன்பு ஒருமாதிரி பேசுவார். 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் சும்மா விடமாட்டேன்." என ஆவேசமாகப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications