சபாஷ் அமைச்சர்.. கமலாத்தாள் பாட்டி வீடு தேடி வந்த கேஸ் சிலிண்டர்.. இட்லியும் ரெடி
கோவை: உணவு பரிமாறுவது மிகப்பெரிய சேவை. ஆனால் விற்கிற விலைக்கு தகுந்த தரமான, சுவையான உணவை வழங்கும் ஹோட்டல்கள் மிகவும் குறைவு. கலப்படம், தரக்குறைவு என்று சர்ச்சையில் சிக்கும் ஹோட்டல்கள் அதிகம். கோவையில் கமலாத்தாள் பாட்டி நீண்ட காலமாக ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி வருகிறார். அவரின் சேவையை பாராட்டி இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு கொடுத்தனர். திடீரென அதை நிறுத்தியதால் அவர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீருடன் மனு அளித்தார். அவர் மனு மளித்த ஒரே நாளில் மத்திய, மாநில அரசுகள் அவர் வீட்டிற்கே சென்று தீர்வளித்தனர்.
இன்றைய காலத்தில் ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும். கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வடிலேம்பாளையம் கிராமம் சென்றால் சுட சுட இட்லியும், சாம்பாரும் கிடைக்கும். ஒரு இட்லி ஒரு ரூபாய் தான். இந்த சேவையை செய்து வருவது கமலாத்தாள் என்கிற 85 வயது பாட்டி. விலைவாசி ஏறினாலும், பாட்டி கடையில் இட்லி விலையும் சுவையும் மாறாது.

1 ரூபாயில் சேவை
இந்த வயதிலும் ஒரு நாள் கூட கடைக்கு விடுப்பு விடாமல் ஏழை மக்களின் பசியை ஆற்றி வருகிறார். இத்தனைக்கும் பாட்டிக்கு உதவி செய்வதற்கு ஆட்கள் இல்லை. குடும்பத்தினர் யாரின் உதவியும் இல்லாமல் தனி ஒருவராக இந்த சேவையை செய்து வருகிறார். அவரின் சேவை இந்தியா முழுவதும் பாராட்டை பெற்றது. அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் அவரை தேடி சென்று ஆதரவு தெரிவித்தனர்.
பலர் தங்களால் முடிந்த உதவிகளையும் செய்தனர். அரசு, அரசியல் கட்சியினர் என்று பல்வேறு தரப்பினர் கமலாத்தாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீட்டினர். தனியார் நிறுவனங்கள் சார்பில் அவருக்கு இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தனர். கடந்த 6 ஆண்டுகளாக இலவச சிலிண்டர் பாட்டியின் வீடு தேடி வந்தது. அதனால் சமையல் பொருட்களின் விலை ஏறியபோதும் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்து வந்தார்.
கேஸ் சிலிண்டர் நிறுத்தம்
திடீரென எந்த தகவலையும் சொல்லாமல் இலவச சிலிண்டரை அந்த நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதனால் கமலாத்தாள் செய்வதறியாமல் தவித்தார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு கமலாத்தாள் சென்று மனு அளித்தார். அதில் அவர், "கடந்த சில ஆண்டுகளாக மாதம் 2 சிலிண்டர் இலவசமாக கொடுத்து வந்தனர்.
அதை திடீரென நிறுத்திவிட்டனர். தற்போதுள்ள விலை வாசி உயர்வில் என்னால் சிலிண்டர் செலவை சமாளிக்க முடியவில்லை. எனக்கு தொடர்ந்து இலவச கேஸ் சிலிண்டர் கொடுத்தால் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்க உதவியாக இருக்கும் "என்று கூறினார். இந்த தகவல் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாக பரவியது. கமலாத்தாள் பாட்டிக்கு ஆதரவாக பலருடம குரல் கொடுத்தனர்.
வீடு தேடி வந்த நற்செய்தி
தகவல் அறிந்த பிறப்டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சம்பத்குமார், "கமலாத்தாள் பாட்டிக்கு இன்று முதல் இலவச கேஸ் சிலிண்டர் வழங்க வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமாருக்கு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கமலாத்தாளுக்கு இன்று முதல் தடையில்லா கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்று ஆட்சியர் அறிவித்தார்.
சொன்னபடியே காலை கமலாத்தாள் வீட்டிற்கு கேஸ் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் மத்திய அரசு மற்றும் பிபிசிஎல் மற்றும் கேஸ் முகவர்கள் இணைந்து மாதம் 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளனர். அவர்களும் கமலாத்தாள் பாட்டிக்கு இன்று முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் கமலாத்தாள் பாட்டி மகிழ்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்குவேன் என அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
