ஆம்னி பஸ்ஸில் போகப் போறீங்களா?.. கோவை மக்களுக்கு முக்கிய அப்டேட்.. என்னன்னு பாருங்க
கோவை: தீபாவளியை முன்னிட்டு கோவையில் இருந்து ஆம்னி பஸ்களில் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கோவை போக்குவரத்துக் கழகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகைளில் ஒன்றாகும். இந்தியாவில் தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு என ஊரே களைகட்டும். இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். பயணிகளின் வசதிக்காக பண்டிகையையொட்டி அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆம்னி பேருந்துகளில் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளி மாவட்டங்களுக்கு இயக்கவிருக்கும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியாவிலிருந்து மட்டுமே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கொடிசியாவில் இருந்து இயக்கப்படும் சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் அவிநாசி சாலை வழியாகவும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் சின்னியம்பாளையம், நீலாம்பூர், L&T பைபாஸ் வழியாக சென்று திருச்சி சாலையை சென்றடைவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடிசியா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக உணவுகள் கிடைக்கும் பொருட்டு, கட்டணம் செலுத்தி பெறக்கூடிய தற்காலிக உணவகங்கள் அமைக்க கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு ஆணையர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க பொதுமக்களுக்கு கீழ்க்காணும் இடங்களில் தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
1. காந்திபுரம் பகுதியில் மத்திய சிறைச்சாலை திடல், மத்திய சிறைச்சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில், மாநகராட்சி நிறுத்தம், மாநகராட்சி பள்ளி வளாக மைதானம், மார்டின் திடல் மற்றும் லட்சுமி காம்ப்ளக்ஸ் வாகன நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
2. உக்கடம் பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜவீதி, உக்கடம் மேம்பாலம் அருகில், கோனியம்மன் கோவில் எதிர்புறம் உள்ள சாலையில், நரசிம்மர் கோவில் நெடுஞ்சாலையில் போத்திஸ், சென்னை சில்க்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில், ராயல் தியேட்டர் பி.பி சாலை ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்கும் வகையிலும், ஏதேனும் குறைபாடுகள் சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலை பேசி எண். 1077 அல்லது 0422-2306051 தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications