அதிவேகமாக வந்த கார்.. கிணற்றில் பாய்ந்து விபத்து! கோவையில் ஓணம் கொண்டாடிவிட்டு திரும்பிய மூவர் பலி
கோவை: ஓணம் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய போது, கார் கிணற்றில் பாய்ந்ததில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தைக் கேரள மக்கள் ஓணம் பண்டிகையாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.
மொத்தம் 10 நாட்களுக்குக் கொண்டாடும் இந்த ஓணம் திருநாளில் மகாபலி பூவுலகுக்கு வருவதாகக் கேரள மக்கள் நம்புகின்றனர். அவரை வரவேற்கும் விதமாக வண்ண மலர்களால் கோலமிடுவார்கள்.

விபத்து
கேரளா மட்டுமின்றி, மலையாள மக்கள் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். தமிழகத்திலும் கோவை உள்ளிட்ட மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்படித்தான் கோவையில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடிவிட்டுத் திரும்பிய போது, கார் கிணற்றில் பாய்ந்ததில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதிவேகம்
கோவை அருகே இருக்கும் போளுவாம்பட்டி - தொண்டாமுத்தூர் சாலையில் அதிகாலை நேரத்தில் வேகமாக வந்த கார், தென்னமநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வளைவில் திரும்ப முற்பட்டது. அதிவேகமாக வந்ததால், திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குத் தோட்டத்தின் கேட்டை உடைத்துக் கொண்டு, அங்கிருந்த கிணற்றுக்குள் பாய்ந்தது. 120 அடி ஆழம் இருந்த அந்த கிணறு முக்கால்வாசி நிரம்பி இருந்தது.

கிணற்றில் பாய்ந்தது
மேலும், வேகமாகப் பாய்ந்ததால், கார் நீரில் மூழ்கத் தொடங்கியது. அப்போது ஓட்டுநர் இருக்கையில் இருந்த இளைஞர் மட்டும் கதவைத் திறந்து வெளியே வந்தார். இருப்பினும், மற்ற மூன்று பேரால் சீக்கிரம் வெளியே வர முடியவில்லை. இதனால் அவர்கள் அப்படியே காருடன் மூழ்கினர். இந்த விபத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள், இது குறித்து உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

ஒருவர் தப்பினார்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் ரோஷன் என்பது தெரிய வந்தது. கார் ஓட்டி வந்த அவர், எப்படியோ கார் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்துவிட்டார். அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு இருந்த நிலையில், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மூவர் பலி
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஆதேஷ், ரவி மற்றும் நந்தனன் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் உடலையும் பிரேதப் பரிசோதனைக்குக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும் அந்த வாகனத்தைக் கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார்
இந்த விபத்து குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் கூறுகையில், "ஓணம் பண்டிகையைக் கொண்டாட நால்வரும் நேற்று கோவை - சிறுவாணி சாலையில் உள்ள ஒரு தனியார் கிளப்புக்குச் சென்றுள்ளனர். இரவு அங்கேயே ஓணம் பண்டிகையைக் கொண்டாடிய அவர்கள், இன்று காலை வீட்டுக்கு திரும்பி உள்ளனர். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்து உள்ளது இதில் காரை ஓட்டி வந்த ரோஷன் மட்டும் எப்படியோ வெளியே வந்துவிட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications