செந்தில் பாலாஜிக்கு என்ன ஆச்சு .. கோவையை மறந்தே போய்ட்டாரா.. குமுறும் திமுக
கோவை: திமுகவின் கரூர் மாவட்ட பொறுப்பை மட்டும் கவனித்த செந்தில் பாலாஜிக்கு, மேற்கு மண்டல பொறுப்பு செல்ல கோவை முக்கிய காரணம். கடந்த திமுக ஆட்சியில் கோவை அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. செந்தில் பாலாஜி இல்லாமல் கோவையில் அணுவும் அசையாது. ஆட்சி மாறியதும் காட்சிகள் வெகுவாக மாறிவிட்டது. கோவை திமுக நிகழ்ச்சிகளில் கூட செந்தில் பாலாஜி கலந்து கொள்வதில்லை. அவர் எம்எல்ஏவாக உள்ள கோவை தெற்கு தொகுதியையும் எட்டி பார்ப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் திமுகவுக்கு தேர்தல் அரசியலில் பெரிய வெற்றியை கொடுத்ததில்லை. அதை சரி செய்யும் பொறுப்பு செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை கோவை திமுக செந்தில் பாலாஜி கண் அசைவில் இயங்கியது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபோதும், அவர் சொல்படியே இயங்கியது.

கோவைக்கு டாடா
2022 உள்ளாட்சி தேர்தல், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தபடி, கோவை தொகுதியில் அண்ணாமலையை வீழ்த்த உதவி செய்தார். சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அவர் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளரானார். கோவை மட்டுமல்லாமல் மேற்கு மண்டலம் முழுவதும் அவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 2026 பொதுத்தேர்தலில் கரூருக்கு பதிலாக, கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.
தேர்தலுக்கு முன்பாகவே ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தார். தேர்தலில் வெற்றியும் பெற்றார். ஆனால் திமுக ஆட்சிக்கு வரவில்லை. தேர்தலுக்கு முன்பு வரை சென்னை, கரூர், கோவை மூன்று மாவட்டங்களிலும் செந்தில் பாலாஜி மாறி மாறி பயணிப்பார். காலை சென்னை, மதியம் கோவை, இரவு கரூர் மாவட்டத்தில் இருப்பார். தேர்தலுக்கு பிறகு அவர் செந்தில் பாலாஜி கோவையை மறந்தே விட்டார் என்று திமுகவினரே புலம்புகிறார்கள். கடந்த 6 மாதங்களாக அவர் கோவைக்கு அதிகம் வரவே இல்லை.
செந்தில் பாலாஜியால் குழப்பம்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு செந்தில் பாலாஜி மீது ஏராளமான வழக்குகளை போட்டு கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் சிறிது காலம் தலைமறைவாக இருந்தார். வழக்குகளில் ஜாமீன் வாங்கி ஆக்டிவ் அரசியலுக்கு திரும்பிவிட்டார். ஆனால் கோவை பக்கம் வருவதில்லை. தேர்தல் முடிந்த பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கோவை தெற்கு தொகுதிக்கு ஒரே ஒரு முறை தான் வந்தார்.
தெற்கு தொகுதிக்குட்பட்ட 19 வார்டுகளில் தலா ஒரு அலுவலகம் அமைப்பேன் என கூறினார். ஏற்கனவே இருந்த பொதுவான ஒரு அலுவலகம் மட்டுமே இப்போதும் உள்ளது. திமுக நிகழ்ச்சிகளில் கூட செந்தில் பாலாஜி கலந்து கொள்வதில்லை. தேர்தல் தோல்வியால் தமிழகம் முழுவதும் திமுகவை மறுசீரமைப்பு செய்யவுள்ளனர். இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து கள ஆய்வு செய்து வருகிறார்கள். கோவை திமுகவினர் கூறுகையில், கோவை மாவட்டத்திற்கு, சேலம் முன்னாள் எம்.பி பார்த்திபன், முன்னாள் மேயர் பிரியதர்ஷினி பொறுப்பாளர்களாக உள்ளனர்.
புறக்கணிப்பு
அவர்கள் கடந்த மாதம் கோவை ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை. மறுசீரமைப்பை இறுதி செய்வதற்கான கோவை திமுக மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடக்கும் என்றே முரசொலி நாளிதழில் அறிவிப்பு வெளியானது. கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு மாவட்டங்களுக்கு தனித்தனியாக கூட்டம் நடந்தது.
மூன்றிலும் செந்தில் பாலாஜி கலந்துகொள்வார் என சொல்லப்பட்டது. எந்த கூட்டத்திலும் செந்தில் பாலாஜி கலந்து கொள்ளவில்லை. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக செந்தில் பாலாஜியின் பரிந்துரைகளை பொறுப்பாளர்கள் ஏற்கவில்லை. அவரை மீறி நடக்கும் செயல்களை செந்தில் பாலாஜி விரும்பவில்லை. ஆட்சி இருந்தவரை அவருக்கு கோவை தேவைப்பட்டது. ஆட்சி போனதும் கோவையை கைக்கழுவிவிட்டார்" என்று குமுறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
