சீன் மாத்திட்டாங்க.. முன்னாடியே செய்திருக்கலாம்.. ஜெய்பீம் படத்தை வைத்து கொங்கு ஈஸ்வரன் அட்வைஸ்
ஜெய்பீம் படம் குறித்து கொங்கு ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்
கோவை: "ஜெய்பீம் திரைப்படத்தில் எதிர்ப்புக்கு பின்னர், சில காட்சிகளை மாற்றி இருக்கிறார்கள்.. அதனை முன்னரே செய்து இருக்கலாம்.. உள்நோக்கத்தோடு சில விஷயங்களை திரைத்துறையில் செய்கிற காரணத்தால் இதுபோன்ற எதிர்ப்புகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது" என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்திற்கு பிறகு ஈ.ஆர்.ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார்.. ஜெய்பீம் படம் உட்பட தமிழக பாஜகவின் அண்ணாமலையின் செயல்பாடுகள் வரை, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஈஸ்வரன் அளித்த பதில்களும், கருத்துக்களும்தான் இவை:

ஜெய்பீம்
"திரைப்படத்துறையில் தயாரிப்பாளராக இருந்தாலும், எந்த நடிகராக இருந்தாலும் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தாமல் படம் எடுக்க வேண்டும், ஆக்கபூர்வமான கருத்துக்களை மக்களிடம் விதைப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும்,எந்த காரணத்தைக் கொண்டும் சிறிய அளவில் கூட மக்களின் மனம் புண்படும் வகையில் செய்துவிடக்கூடாது. ஜெய்பீம் திரைப்படத்தில் எதிர்ப்புக்கு பின்னர் தற்போது சில காட்சிகளை மாற்றி இருக்கிறார்கள்,அதை முதலில் செய்து இருக்கலாம்.

உள்நோக்கம்
இன்று காட்சியை மாற்ற வேண்டும் என்று யோசிப்பவர்கள் முதலிலேயே அதை மாற்றி இருக்கலாம்.. உள்நோக்கத்தோடு சில விஷயங்களை திரைத்துறையில் செய்கிற காரணத்தால் இதுபோன்ற எதிர்ப்புகளை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. பல நேரங்களில் பல சமுதாயங்களுக்கு எதிரான சில நிலைப்பாடுகளை ஒரு சில நடிகர்கள் தங்களுடைய படத்தில் காட்சிகளாக அமைக்கிறார்கள். அதையெல்லாம் தவிர்க்க தான் தமிழர்கள் சுமுகமாக வாழ்வதற்கு உதவியாக இருக்கும்.

பாஜக
பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த ரயில்கள் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊடகங்களில் அதிமுக செய்திகள் வருவதைவிட பிஜேபி செய்திகள் வரவேண்டும் என்று எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் இல்லாமல் அறிக்கைகளை கொடுத்து முக்கியத்துவம் பெற அண்ணாமலை முயற்சி செய்கிறார்.. முல்லைப் பெரியாறு அணையை பொறுத்தவரை தமிழக அரசுக்கு முழுமையாக தெரியும். நீர்வளத்துறை அமைச்சர் அனுபவம் கொண்டவர்.. கண்டிப்பாக தமிழகத்திற்கு ஆதரவான நிலை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அண்ணாமலை
அண்ணாமலை போன்றவர்கள் அவசர அவசரமாக செய்திகளை உருவாக்கி ஊடகங்களில் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறார். முல்லைப் பெரியாறு பிரச்சனை, பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், கேரளாவிலிருந்து வரும் எந்த நதிகளாக இருந்தாலும் முதல்வர் கேரளா அரசுடன் சுமூக உறவு வைத்துள்ளார்.. கேரளாவினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் வராது.. சிறு மாற்றம் இருந்தாலும் நீர்ப்பாசன பிரச்சனையை தமிழக அரசு பாதுகாக்கும்.. கடந்த அதிமுக ஆட்சியில் சென்னையில் கால்வாய்கள், ஏரிகள் தூர்வாரப்படாத காரணத்தினால்தான் தற்போது சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications