கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம்.. அமைச்சர் செங்கோட்டையன் சொன்னது என்ன?
கோவை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு, தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்திருக்கும் விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்கட்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெக அமைச்சர் செங்கோட்டையன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்து குறித்தும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தவெக அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார். செல்லூர் ராஜு கருத்து பற்றிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், "தமிழக முதல்வர் பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றி வருகிறார். இந்தக் கருத்தை கூறியவரே வெற்றி பெற முடியவில்லை. வெற்றி பெறாதவர்கள் எல்லாம் வாய்கிழிய பேசுவது வேடிக்கையாக உள்ளது.
எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இன்னொரு இயக்கத்தை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்வது இன்றைய சூழலில் நாகரிகமாக இருக்காது. தமிழக அரசின் மீது யாரும் சாட்டையை சுழற்ற முடியாது." என்றார்.
மேலும், "கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் விசாரிப்பது என்பது ஒவ்வொரு ஆணையத்திற்கும் அதற்கான அதிகாரங்களும் பொறுப்புகளும் உள்ளன. அவர்கள் விசாரிக்கட்டும், அதன் பிறகுதான் நம் கருத்தை கூற முடியும்.
விசாரணை தொடங்கிய உடனேயே அமைச்சர்களிடம் இது குறித்துக் கேள்வி எழுப்புவது, அந்த விசாரணையைப் பாதிக்கக்கூடும். விசாரணைக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் செங்கோட்டையன்.
எதிர்க்கட்சித் தலைவர் சொல்வது போல சட்டம் ஒழுங்கு குறித்து பேச வேண்டும் என்றால் நாங்கள் பல கருத்துகளை சொல்ல முடியும். அவரது ஆட்சி காலத்தில் என்ன நடந்தது என்பதை நாடே அறியும். இன்றைக்கு நம்மைப் பற்றி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தது. இது போன்று எண்ணற்ற குற்றங்களை எங்களால் சொல்ல முடியும்.
ஏன் மக்கள் இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றினார்கள் என்பதற்கு பதில் சொல்ல வேண்டும். சிறந்த ஆட்சியை தந்திருந்தால் எதற்கு இப்போது எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறார்கள்? சிறந்த ஆட்சியை தர வேண்டும் என்று சொல்லக்கூடிய இவர்கள் ஏன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் பதில் சொல்லட்டும், அதற்குப் பிறகு நான் என்னுடைய பதிலை சொல்கிறேன்." என்றார்.
தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், "எங்கள் கட்சியினர் அனைவருக்கும் என்ன அறிவுறுத்தல்களை வழங்க வேண்டுமோ அதனை முதல்வர் விஜய் வழங்கியிருக்கிறார். தற்போது ஒவ்வொரு செய்திகளும் யூடியூப், வாட்ஸ்அப் என ஒரு நிமிடத்திற்குள் தெரிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் பார்த்திருக்கக்கூடும் பத்திரிக்கையில் வரும் செய்திகளே, மூன்று நாட்களுக்கு பிறகு தான் தெரியும். அன்றைய நிலை வேறு, இன்றைய நிலை வேறு." எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
