செந்தில் பாலாஜி என் தம்பி.. இது என் தொகுதி.. கோவை தெற்கில் உணர்ச்சிவசப்பட்ட கமல்!
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கேவை தெற்கு தொகுதி மாநிலமே உற்றுநோக்கும் தொகுதியாக மாறியுள்ளது. தொகுதியில் அடுத்தடுத்து விவிஐபிகளை இறக்கி செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு பிரச்சாரம் செய்யத கமல்ஹாசன், கடந்த 2021 தேர்தலில் அவர் கோவை தெற்கில் போட்டியிட்ட நினைவுகளை சொல்லி உணர்ச்சிவசப்பட்டார்.
கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, "கோவை தெற்கு தொகுதி மக்கள் குறித்து எனக்கு நன்றாக தெரியும். அவர்கள் உணர்வுபூர்வமானவர்கள். இந்த தொகுதிகளில் நான் நடந்து செல்லாத வீதி இல்லை.

கமல் உருக்கம்
இது என்னுடைய மக்கள். என்னை அழைக்க வந்தபோது, இது உங்கள் தொகுதி என்று செந்தில் பாலாஜி பெருந்தன்மையாக சொன்னார். அவரிடம் நான், இது நம்முடைய தொகுதி என்று கூறினேன். கடந்த தேர்தலில் ஒரு பைசா கூட வாங்காமல் எனக்காக 51,481 வாக்குகளை செலுத்தினர். அந்த வாக்குகள் பாலாஜிக்கு விழும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
அது அன்பினால் வந்த வாக்குகள். என்னுடைய எம்.பி பதவிக்கான நிதியில் இருந்து முதல் கடமையை செய்த இடம் கோவை தெற்கு தொகுதி தான. ரூ.1. 12 கோடி நிதியை கோவை தெற்கு தொகுதிக்கு ஒதுக்கியுள்ளேன். அந்த நிதியில் இங்கு உலக தரத்தில் சர்வதேச தரத்திலான ஒரு நீச்சல் குளம் உருவாக்கி கொண்டிருக்கிறது.
கோவை திட்டங்கள்
எனக்கு இந்த தொகுதியில் அதிக தொடர்புகள் உள்ளன. ஜிடி நாயுடு உருவாக்கிய பேருந்து போக்குவரத்து கழகம், பிற்காலத்தில் தமிழ்நாட்டுக்கு உரிய போக்குவரத்து கழகமாக மாறியது. அவருடைய பெயரில் மேம்பாலம் கட்டியது மிகவும் நியாயமான, நன்றியுள்ள செயல். மற்ற மாநிலங்கள் பார்த்து பொறாமைப்படுமளவுக்கு திமுக திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
கோவைக்கு ஏன் மெட்ரோ விடவில்லை என்று கேட்டால், மக்கள் தொகை குறைவாக உள்ளது என்று பாஜக கூறுகிறது. மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலத்திற்கு நிதிகளை தளர்த்தி மெட்ரோ ரயில் விடுகிறார்கள். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை எந்த விதத்தில் குறைந்துவிட்டது. நான் இளைஞராக இருந்த காலத்திலேயே கோவை விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. தற்போது வரை அதை செய்யவில்லை.
உருவாக போகும் மாற்றம்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளில் திமுகவை வென்று காட்டியவர் செந்தில் பாலாஜி. அந்த சரித்திரத்தை மீண்டும் அவரால் நிகழ்த்தி காட்ட முடியும். அதில் என்னுடைய ஐம்பதும் சேரும். செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்கு வந்தது முதலமைச்சர் அவருக்கு கொடுத்துள்ள அஸைன்மென்ட். தமிழக அரசியல் சரித்திரத்தில் ஒரு புதிய மாற்றத்தை கோவை உருவாக்க போகிறது.
சென்னையில் ஒரு செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இங்கே ஒரு கோட்டை என்று மாறப்போகிறது. செந்தில் பாலாஜி தான் அந்த கோட்டையை தொடங்கி வைக்க போகிறார். கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது. ஏற்கனவே இங்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தவர் வேறு தொகுதியில் போட்டியிட்டிருப்பதே செந்தில் பாலாஜிக்கு வெற்றி.
இது என் தொகுதி
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது கோவையின் பழமொழி. அப்படியென்றால் இங்கு செழிக்கும் என்பதற்கான அனைத்தும் உங்கள் கண்களில் தெரிகிறது. ஓட்டு போட்டால் மெட்ரோ கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதற்கு பேர் வாக்குறுதியா அல்லது பிளாக்மெயிலா. இந்த பிளாக் மெயில் அரசியல் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது.
வடவர் படையெடுப்பை முறியடிப்போம். செந்தில் பாலாஜி அனைத்தையும் நிறைவேற்றுவார். நான் அதை அவரின் பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறை செந்தில் பாலாஜி அந்த புள்ளியை எட்டும்போதெல்லாம் பாராட்டுவேன். தேவைப்பட்டால் விமர்சிக்கவும் செய்வேன். இவர் என் சகோதரர். இது என்னுடைய தொகுதி. நம்முடைய தொகுதி நம்முடைய மக்கள் என்பதில் பெருமையடைகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications