கோவை தானா? கமல் முடிவு பண்ணிட்டாராமே! நாளை முக்கிய ஆலோசனை.. 2024 தேர்தலில் கூட்டணிக்கு ரெடி!
கோவை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை கோவையில் நடைபெறுகிறது. 2024 லோக்சபா தேர்தல் நெருங்கும் சூழலில், கூட்டணி குறித்தும், போட்டியிடும் தொகுதி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டது மநீம. இந்த 2 தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2.6 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தாலும், வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல்ஹாசனும் சொற்ப வாக்குகளில் வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அடுத்து வரவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து கமல்ஹாசன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் தலைமையில் நாளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என ஆய்வில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோரின் சாய்ஸ் கோவையாகவே உள்ளதாம்.
இந்நிலையில் தான் மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை கோவையில் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து நாளை காலை விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்று பீளமேடு பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் நாளை மேற்கொள்ளவுள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட மநீம கட்சியினர் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். முன்னதாக, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டார் கமல்ஹாசன். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் பல்வேறு மேடைகளை கமல்ஹாசன் பகிர்ந்து வருவதால் திமுக கூட்டணியில் கமல் இணைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் தனது கருத்தைத் தெரிவித்து, தேர்தல் பணியாற்ற ஆலோசனைகளை வழங்குவார் எனக் கூறப்படுகிறது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் மக்கள் நீதி மய்யம் இணையவும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications