அதிமுக ஆட்சியில் ஊழல்.. ஆதாரத்தை லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைப்பேன்.. குண்டை போடும் கோவை செல்வராஜ்
கோவை: அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளுக்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் அண்மையில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் திமுகவில் இணைந்தார். அதிமுகவை தங்கள் சுயநலத்திற்காக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிசாமியும் பாழாக்குகிறார்கள்.
ஓபிஎஸ்ஸும் வைத்திலிங்கமும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவிகளை கொடுத்து வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்ததற்கு நான் வெட்கப்படுகிறேன்.

பாவமன்னிப்பு
தமிழக மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அறிவித்தார். ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை பார்த்த பிறகு தன்னால் அதிமுகவில் தொடர முடியவில்லை என்ற ஒரு கருத்தையும் முன் வைத்திருந்தார். இந்த நிலையில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் முயற்சியில் நாங்களும் துணையாக நிற்போம்.

3000 பேர்
தமிழக முதல்வர் அனுமதி கொடுத்தால் 3000 பேர் திமுகவில் இணையும் விழாவை நடத்தவுள்ளேன் என்றும் கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார். ஒரு சிலர் மாற்றுக் கட்சியில் இணைந்தால் ஏற்கெனவே இருந்த கட்சி மீது விமர்சனம் செய்வார்கள், சிலர் செய்ய மாட்டார்கள். ஆனால் கோவை செல்வராஜ் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் முன் வைத்துள்ளார்.

திமுக அலுவலகம்
கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்திற்கு நேற்றைய தினம் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் எல்இடி விளக்குகள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. அது போல் கோவையில் குளங்களை தூர்வாரும் பணிகளின் போது ஊழல் நடந்துள்ளது.

ஊழல்கள்
இது மட்டுமல்லாமல் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. அந்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் நேரில் சென்று ஒப்படைக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு கொள்ளை கொலை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி
கொடநாடு கொள்ளை கொலை சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் அணியில் இருந்த போதே கோவை செல்வராஜ் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதிமுக ஆட்சியில் ஊழல் குறித்து ஆளுநர் மாளிகையில் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் புகார் அளித்திருந்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கந்தசாமி நியமிக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு
இவர் பொறுப்பேற்ற நாள் முதல் முன்னாள் அமைச்சர்களின் மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்து வருகிறார். அந்த வகையில் முதலில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கே.சி. வீரமணி, சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது. அது போல் ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏற்கெனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனவே அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கான ஆதாரங்களை கோவை செல்வராஜ் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் கொடுத்தால் யார் யார் சிக்குவார்கள் யார் யார் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications