"சைரன் அடிக்கும்.. 20 நொடி தான் டைம்.. இல்லைனா.." இஸ்ரேல் பயங்கரம்.. கோவை திரும்பிய இளைஞர் பகீர்
கோவை: இஸ்ரேல் போர் காரணமாக அங்கிருந்து தமிழகம் திரும்பிய கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அங்கு தற்போது இருக்கும் நிலைமை குறித்த தகவல்கள் பகிர்ந்து வருகிறார்.
இஸ்ரேல் நாட்டில் கடந்த வாரம் போர் ஆரம்பித்தது. ஹமாஸ் படை கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது. கடந்த பல ஆண்டுகளில் அங்கே நடந்த மோசமான தாக்குதலாக இது இருந்தது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுக்க தொடங்கியது.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்திய நிலையில், அங்கே நிலைமை மோசமானது. இஸ்ரேல் நாட்டில் பல்வேறு வெளிநாட்டவர் குறிப்பாக இந்தியர்கள் இருந்த நிலையில், அவர்கள் நிலையும் கேள்விக்குறியானது.
இஸ்ரேல் போர்: இதற்கிடையே அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக இஸ்ரேல் நாட்டிற்குச் சிறப்பு விமானங்களும் இயக்கப்பட்டது. அதன்படி இஸ்ரேல் நாட்டில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி அங்கு பணியாற்றிய கோவை இளைஞர் ஒருவர் இன்று தாயகம் திரும்பினார். அவர் இஸ்ரேலில் இப்போது இருக்கும் நிலை குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாகக் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2020இல் முதுகலை மருத்துவம் படிக்க நான் இஸ்ரேல் சென்றிருந்தேன். நான் இஸ்ரேல் வடக்கு பகுதியில் இருந்தேன். அங்கே தான் லெபனான், சிரியா எல்லை இருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இப்படி ஒன்றை நான் பார்த்தே இல்லை. தொடர்ச்சியாக மொபைல்களில் அலர்ட் வந்து கொண்டு இருந்தது
ஷெல்டர் ரூம்: அங்கே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. எங்கள் பல்கலைக்கழகம் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது. இந்திய அரசைப் போலவே இஸ்ரேல் அரசும் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்காவாக திட்டமிட்டிருந்தனர். அதன்படி எங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர்.
அங்கே ஷெல்டர் ரூம் என ஒன்று இருக்கிறது. அங்கே ஏவுகணை குறித்த அலர்ட் வந்தால் அடுத்து நமக்கு 30 நொடிகள் தான் டைம். அதற்குள் ஷெல்டர் ரூமிற்கு சென்றுவிட வேண்டும். அடுத்து அலர்ட் போன பிறகும் கூட 10 நிமிடங்கள் அங்கேயே இருக்க வேண்டும். இதுவரை அப்படி ஒன்றை நான் வாழ்க்கையிலேயே பார்த்தது இல்லை. அது நிஜமாகவே அச்சுறுத்தும் வகையில் இருந்தது.
கதறிய குழந்தை: எனது குழந்தைக்கு 2 வயதுதான் ஆகிறது. சைரன் கேட்டதும் எனது குழந்தை அழத் தொடங்கிவிட்டது. அந்தளவுக்கு சைரன் சத்தம் வலிமையாக இருக்கும். நமக்கு சைரன் ஒலி அடிக்கும் போது வேறு வழியும் இல்லை. ஷெல்டர் ரூமிற்குள் சென்றாக வேண்டிய நிலையே இருந்தது. நிலைமை மோசமான நிலையில், இஸ்ரேல் நாட்டில் இருந்து வெளியேற விரும்புவோர் பதிவு செய்யலாம் என்று ஒரு லிங்கை பகிர்ந்தார்கள்.
இஸ்ரேல் நாட்டில் நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அங்கே எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். இருந்த போதிலும், நாங்கள் அங்கே அச்சத்துடனேயே இருந்தோம். எப்போது சைரன் அடிக்கும் என்றே தெரியாது. இந்த பிரச்சினை எப்போது முடியும் என்றே தெரியாது என்பதாலேயே அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
மத்திய அரசு பகிர்ந்த லிங்கில் நாங்கள் தேவையான தரவுகளைப் பகிர்ந்தோம். குழந்தை, பெண்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இன்னுமே கூட அங்குப் பல மாணவர்கள் இருக்கவே செய்கிறார்கள். இந்த போரால் அங்கே இயல்பு நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களும் விரைவாக நாடு திரும்புவார்கள் என்றே தெரிகிறது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications