ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! லோக்சபா தேர்தலில் சுவாரசியம்
கோவை: வரும் லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களாக போட்டியிட உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதி + புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு 45 நாட்கள் கழித்து ஜுன் மாதம் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் நேற்று லோக்சபா தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக இன்று 2வது நாளில் நடந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 இடங்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 21 இடங்களில் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தான் கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டத்தின் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளனர் என்ற சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஈரோடு தொகுதியில் சிட்டிங் எம்பியாக இப்போது கணேசமூர்த்தி உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் அவருக்கு மீண்டும் திமுக வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
அதேபோல் திமுக கூட்டணியில் கொங்கு மண்டலத்தில் உள்ள நாமக்கல் லோக்சபா தொகுதியில் எம்பியாக சின்ராஜ் உள்ளார். இவர் கடந்த முறை திமுக கூட்டணியில் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் திமுக கூட்டணியில் இந்த முறை நாமக்கல் தொகுதி கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிட்டிங் எம்பி சின்ராஜுவுக்கு பதில் சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரும் வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
அதன்படி ஈரோடு லோக்சபா தொகுதியின் திமுக வேட்பாளர் பிரகாஷ் மற்றும் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் சூரியமூர்த்தி ஆகியோர் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் சிவகிரி கிராமத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் வரும் லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications