‛ஊழலுக்கு யுனிவர்சிட்டி கட்டினால் பிரதமர் மோடி தான் வேந்தர்’.. ராகுல் முன் பாஜகவை விளாசிய ஸ்டாலின்
கோவை: ஊழலை பற்றி பேச பிரதமர் மோடி வெட்கப்பட வேண்டும். ஏனென்றால் ஊழலுக்கு யுனிவர்சிட்டி கட்டினால் பிரதமர் மோடி தான் வேந்தராக இருப்பார் என்று ராகுல் காந்தி முன்னிலையில் கோவை பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி முதல்வர் ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் இன்று கோவையில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி திமுக வேட்பாளர் ஈஸ்வர மூர்த்தி, கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி ஆகிய 3 பேருக்கு ஆதரவாக இந்த பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதலில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் என்பது நாடு சந்திக்கும் 2-வது விடுதலை போராட்டம். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் தோளோடு தோள் கொடுத்து திமுக நிற்கும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும். பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தியை வரவேற்கிறேன்.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை நான் தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். நிறைவு கூட்டத்திலும் கலந்து கொண்டேன். ‛மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்’ எனும் அண்ணா வழியில் ராகுல் காந்தி மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு தேர்தல் அறிக்கையை உருவாக்கி உள்ளார். இந்த தேர்தலில் ஹீரோ யார் என்றால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தான்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுக தொடர்ந்து வலியுறுத்தும் அம்சங்கள் உள்ளன. திமுகவின் சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதிரொலித்து உள்ளது. ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம், பெண்களுக்கு மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் இடஒதுக்கீடு, நீட் தேர்வு விலக்கு, நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்களின் கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தப்படுவத எஸ்சி, எஸ்டி காலிப்பணியிடம் ஓராண்டுக்குள் நிரப்புவது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும் கோவை, திருப்பூர் மாவட்ட மக்களை வதைத்து வரும் ஜிஎஸ்டி சட்டத்தை ரத்து செய்து புதிய சட்டம் கொண்டு வருவது. வேளாண் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் செய்வது. வேளாண் பொருட்களுக்கான குறைந்த ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிப்பது உள்ளிட்ட நாட்டுக்கு நம்பிக்கையளிக்கும் அறிக்கையை தந்துள்ளார்.
பிரதமர் மோடி எப்போதும் வெளிநாட்டில் தான் டூரில் இருப்பார். இப்போது தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டில் டூரில் உள்ளார். அவர் தனது பிரசாரத்தில் 10 ஆண்டு ஆட்சிக்கால சாதனையை பற்றி பேசுவது இல்லை. இந்தியா கூட்டணியை பற்றி மட்டும் தான் பேசுகிறார். அதுவும் ஒரே பல்லவி. குடும்ப கட்சி, ஊழல் கட்சி என்றே கூறி வருகிறார். இதற்கும் பலமுறை நான் பதிலளித்துவிட்டேன்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தேர்தலில் மக்களை சந்தித்து மக்கள் அவர்களின் செயல்பாடுகளை எடைப்போட்டு வாக்களித்தால் தான் பதவிக்கு வரலாம். குடும்ப அரசியல் என்று எங்களை மட்டும் அவமதிக்கவில்லை. எங்களை தேர்வு செய்த கோடிக்கணக்கான மக்கள் அவமதிக்கிறார்.
ஊழல் பற்றி பேச பிரதமர் வெட்கப்பட வேண்டும். ஊழலுக்காக யுனிவர்சிட்டி கட்டினால் பிரதமர் தான் வேந்தர். தேர்தல் பத்திரம் என்பதை கொண்டு வந்து சட்டப்பூர்வமாக ஊழல் செய்தது அவர் தான். மற்ற கட்சிகளும் தேர்தல் பத்திரத்தில் நிதி வாங்கி இருக்கிறோம் என்றால் அவர் கொண்டு வந்த நடைமுறை தான் காரணம். மேலும் அவர்கள் அமலாக்கத்றை, சிபிஐ, மூலம் ரெய்டு விட்டு பணம் பறித்துள்ளனர்’’ என்றார்.












Click it and Unblock the Notifications