தவறான தகவல் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை.. அண்ணாமலை வீடியோ பரவிய நிலையில்.. கோவை போலீசார் வார்னிங்
கோவை: தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவுறைகளை வழங்கியுள்ளது. இதனை மீறி தவறான தகவலை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை போலீசார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆரத்தி எடுத்த வாக்காளருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக கூறி வீடியோ ஒன்று பரவியது. இந்த வீடியோ கோவை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உண்மைத்தன்மை உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை ஆட்சியர் கூறியிருந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு என் மண் என் மக்கள் யாத்திரையின் போது நடந்த சம்பவத்தை தற்போது பரப்பி விட்டு இருப்பதாக அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோவை காவல்துறை தவறான தகவலை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கோவை போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
லோக்சபா தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகள் சார்பிலும் தேர்தல் பரப்புரைகள் கோவை மாநகரில் நடைபெற்று வருகின்றன. நேற்று (29.03.2024) மாலை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் கண்ணப்பநகர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த ஒரு நபர் மதுபோதையில் மேற்படி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் மீது கற்களை வீசி எறிந்தார்.
மேலும், அந்த நபரை அசிங்கமாக திட்டியும், மிரட்டல் விடுத்தும், தகராறில் ஈடுபட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றவடன் மேற்படி சம்பவ இடத்திற்கு கோவை மாநகரம். சிரி கவுண்டம்பாளையம் காவல் நிலைய காவல் துறையினர் விரைந்து சென்று தகராநில் ஈடுபட்ட மேற்படி நபரை கைது செய்து அவர்மீது கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் சட்டபூர்வ வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சிகளுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு வேட்பாளரும் அல்லது அவர் சார்பாக பிரச்சாரத்திற்கு செல்வோர் எவரும். மேற்படி பிரச்சாரம் குறித்து முறையாக Single Window System மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்பே அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால 29.03.2024ம் தேதி ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சுவிதா செயலி (Suvidha Android App) வழியாக விண்ணப்பித்து அனுமதி எதுவும் பெறாமல் தன்னிச்சையாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான சம்பவம் அல்லது நிகழ்வு பற்றி கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் அதன் உண்மைத் தன்மையைப் பற்றி உறுதிசெய்யாமல் தவறான தகவலகளை வெளியிடக்கூடாது. அவ்வாறின்றி, ஒரு நபர் தனது செயல்கள் மூலம் சுலகத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டாலும், ஏற்படுத்தினாலும் சட்டப்பிரிவு 153 IPCன் படியும்
தனது பேச்சு எழுத்து, செய்கை வாயிலாக மதம், மொழி, இனம் சம்மந்தமாக இருவேறு சமுதாயத்திடையே அமைதியை குலைக்க வேண்டும் என்ற கருத்தை தூண்டும் வகையிலும், விரோதத்தை தூண்டும் வகையிலும் பேசினாலோ அல்லது செயல்பட்டாலோ பிரிவு 153 (A), 504 IPC மற்றும் 125 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படியும் அந்தபர் பயம் அல்லது பீதியை ஏற்படுத்தும் வகையில் அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையில் செய்தியாகவோ, அறிக்கையாகவோ வதந்திகளை பரப்பினால் அல்லது சமூக வலைதளங்களில் வெளியிட்டால் பிரிவு 505 (1)(b) IPC ன் படியும்,
ஜாதி அல்லது மதரீதியாக கிளர்ச்சியை தூண்டும் நோக்கில் அறிக்கை அல்லது வதந்தியை வெளியிட்டால் சட்டப்பிரிவு 505 (1) (c) மற்றும் SOS (2) IPCன் படியும் அனுமதியின்றி துண்டு பிரசுரங்களை அச்சிட்டு வெளியிடுவது மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் சட்டப்பிரிவு 127 (A) மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படியும் அவர்மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பாக எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications