காங்கிரஸை கூட்டணியில் இருந்து கழற்றிவிடுங்க.. 40 தொகுதிகளில் திமுகவை நான் ஆதரிக்கிறேன்..சீமான் உறுதி
கோவை: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து திமுக வெளியேற்றினால் 40 தொகுதிகளிலும் அக்கட்சியை நாம் தமிழர் கட்சி ஆதரித்து தேர்தலில் போட்டியிடாமல் விலகிக் கொள்ளும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது பாஜகவின் முழக்கம். ஆனால் காங்கிரஸின் மிகவும் நெருங்கிய நட்பு சக்தியாக தமிழ்நாட்டில் ஆளும் திமுக இருந்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை முதன் முதலில் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

லோக்சபா தேர்தலுக்கான இந்தியா கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்த 2-வது பெரிய கட்சியாக திமுக இருந்து வருகிறது. ஆனாலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை உடைக்க பல்வேறு வகைகளில் மத்தியில் ஆளும் பாஜக நெருக்கடி தருகிறது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டி இருந்தனர்.
தற்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் காங்கிரஸை திமுக கழற்றிவிட்டால், திமுகவை ஆதரிப்போம் என்கிறார். இது தொடர்பாக கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் போட்டியிடும். 20 பேர் என் தங்கச்சிகளுக்கு வாய்ப்பு தருவேன். என் அம்மாவுக்கு வாய்ப்பு தருவேன்.. என் உடன் பிறந்த அண்ணன் தம்பிகளுக்கு தருவேன். அவ்வளவு பேரும் நன்கு படித்த பிள்ளைகள்.. ஸ்காலர்.. எனக்கு நாடாளுமன்ற கனவு இல்லை. எனக்கு தமிழ்த் தேசிய விடுதலைதான் கனவு.

IF suppose, ஒருவேளை என் தாய்நிலத்துக்குள் குறிப்பாக என் மாவட்டத்துக்குள்ள ராமேஸ்வரத்துக்குள்ள மோடி அய்யா நின்றால் நான் அவரை எதிர்த்து நிற்பேன். தம்பி படத்துல உரையாடல் வரும்ல.. நீ எந்த பக்கம் நின்னாலும் அந்த பக்கம் நிற்பேன்... அது மாதிரி நீ என் நிலத்தில் எங்க வந்து நின்றாலும் நான் நிற்பேன். இவனுக மாதிரி கூழை கும்பிடு போட்டு பேச்சுக்கு பேசுறது இல்லை. உண்மையிலேயே சண்டைக்காரன் மகன் சண்டைக்காரன். நான் நிற்பேன். ஒருவேளை திமுக தன் உதயசூரியன் சின்னத்திலேயே மோடியை வீழ்த்துவதற்கு ஒரு வேளை வலுவான வேட்பாளரைப் போட்டால் நான் போட்ட வேட்பாளரை திரும்பப் பெற்றுவிட்டு அந்த ஒரு தொகுதியில் திமுகவை ஆதரிப்பேன். ஆனால் திமுக கூட்டணிக்கு கொடுத்துவிட்டால் நான் நேரடியாக மோடியுடன் சண்டை போடுவேன்.. நிற்பேன். அப்ப வந்து, ஓட்டை பிரிக்கிறார் சீமான்.. கூரையை பிரிக்கிறார்னு பேசுனா பிச்சு பிடுவேன்.. பிச்சு.. அதான் நீ நில்லு நான் விலகுகிறேன் என்கிறேனே..
இஸ்லாமிய சிறைகைதிகளை விடுதலை செய்வதாக சொல்லுங்கள்.. விடுதலை செய்யுங்க.. 40 தொகுதிகளிலும் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு உங்களை ஆதரிக்கிறேன். அதுவும் குறிப்பாக திமுக 20 தொகுதிகளில் நின்றால் அந்த தொகுதிகளில் வேட்பாளர்களை திரும்பப் பெற்றுக் கொகிறேன். I will support u. Because for this issue. ஆனால் காங்கிரஸ் துரோகத்தை ஒரு போதும் மன்னிக்கமாட்டேன்.. விடமாட்டேன். அதேபோல காங்கிரஸை திமுக கைவிட்டுவிட்டால் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி திமுகவை ஆதரிக்கும் என அறிவிக்கிறேன். எனக்கு நாடாளுமன்றம் ஒரு கனவு அல்ல. இவ்வாறு சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications