கோவை கேஸ் டேங்கர் லாரி விபத்துக்கு காரணம் டிரைவரின் அஜாக்கிரதை? லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் கைது!
கோவை: கோவையில் கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட நிலையில், ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், டேங்கர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணனை நள்ளிரவில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கொச்சியில் இருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் கொள்ளவுடன் LPG கேஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. நேற்று (ஜனவரி 3) அதிகாலை 3 மணியளவில், கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் ஏறி வரும்போது எதிர்ப்பாராத விதமாக, லாரிக்கும் டேங்கருக்கும் இடையேயான இணைப்பு துண்டானது. இதனால் தனியாக பிரிந்த டேங்கர், மேம்பாலத்தின் மீது கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கவிழ்ந்த டேங்கரிலிருந்து எரிவாயு கசியத் தொடங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு டேங்கரின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து எரிவாயு நேரடியாக காற்றில் கலப்பதை தற்காலிகமாக நிறுத்தினர்.
மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்கள் அருகில் செல்லாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவிநாசி சாலை மேம்பாலம், கோவை மாநகரின் முக்கிய சாலைகள் சந்திப்பாக இருப்பதன் காரணமாக மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார், போக்குவரத்தில் மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் எரிவாயு கசிவை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். சுமார் 18 டன் கொள்ளளவு கேஸ் டேங்கரில் இருந்ததால், மீதமிருந்த எரிவாயுவை மற்றொரு டேங்கருக்கு மாற்றும் பணிகளை அதிகாரிகள், பொறியாளர்கள் முழு வீச்சில் மேற்கொண்டனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உள்ளிட்டோர் நேரடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் போக்குவரத்து தடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்தன. டேங்கர் லாரி விபத்து நிகழ்ந்த இடத்தை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று 11 மணியளவில், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகன பாதுகாப்புடன், டேங்கர் லாரி கணபதியில் உள்ள, பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. காஸ் கசிவால் எந்தவித பாதிப்பும் ஏற்படாததால், அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து எரிவாயு கசிந்த நிலையில், அப்போது தீப்பொறி ஏதாவது ஏற்பட்டிருந்தால் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக கோவை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் டேங்கர் லாரி டிரைவரின் அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், டேஙக்ர் லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்துள்ளனர். அவர் அதிக வேகத்தில் லாரியை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கேஸ் டேங்கர் லாரி டிரைவர் ராதாகிருஷ்ணன், "மேம்பாலத்தின் மேலே ஏறும்போது திடீரென லாரியையும், டேங்கரையும் இணைக்கும் பாகம் உடைந்ததால், டேங்கர் தனியாக கழன்று சாலையில் கவிழ்ந்தது" என விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications