புற்றுநோய்க்கு மருந்தாம்! கோவையை நடுங்க வைத்த நாட்டு வைத்தியர்! சிக்கிய மண்ணுளி பாம்பு, புலி தோல்
கோவை: கோவையில் மண்ணுளி பாம்பு, புலித்தோல் உள்ளிட்டவற்றுடன் வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நாட்டு வைத்தியர் பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மண்ணுளி பாம்பை வைத்து அவர் புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க முயன்ற பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் மண்ணுளி பாம்பு, வனவிலங்குகளின் உறுப்புகளில் மருத்துவ குணம் உள்ளதாக சிலர் வேட்டையாடி வருகின்றனர். குறிப்பாக மண்ணுளி பாம்பை பிடித்து ரகசியமாக பதுக்கி வைக்கும் செயல்களும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதற்கு தமிழ்நாடு விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் மண்ணுளி பாம்பில் இருந்து புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பதாக கூறி கோவையை நடுங்க வைத்த நாட்டு வைத்தியரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள நிலையில் அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கோவை தடாகம் ரோடு கோவில்மேடு பகுதியில் நாட்டு மருந்து கடை நடத்தி வருபவர் சின்னதம்பி ராஜா (வயது 32). இவர் மண்ணுளி பாம்பு வைத்திருப்பதோடு, புலித்தோல் உள்ளிட்டவற்றை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் அந்த கடை மற்றும் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
கோவை வனத்துறை ரேஞ்ச் அதிகாரி அருண் குமார் தலைமையில் இந்த சோதனை நடந்தது. அப்போது மருந்து கடையில் இருந்து உயிருடன் இருந்த 2 மண்ணுளி பாம்புகள், இறந்த நிலையில் ஒரு மண்ணுளி பாம்பு, ஒரு மான் கொம்பு, புலித்தோல் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சின்னத்தம்பி ராஜை வனத்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தடாகம் அருகே நாட்டு மருந்துக்கு தேவையான மூலிகைகள் சேகரிக்க சென்றபோது அங்கிருந்து மண்ணுளி பாம்பை அவர் பிடித்து வந்ததாக வனத்துறையினர் கூறினர்.
மேலும் மண்ணுளி பாம்பை வைத்து அவர் புற்றுநோய்க்கான மருந்தை தயார் செய்ய ரெடியாக இருந்தார். அதாவது உயிருடன் பிடித்து வந்த மண்ணுளி பாம்பை மூலிகைகள் நிரம்பிய ஜாடியில் வைத்துள்ளார். இதில் ஒரு மண்ணுளி பாம்பு இறந்தது. இறந்த நிலையில் இருந்த மண்ணுளி பாம்பு மூலிகைகள் நிறைந்த ஜாடியில் 48 நாட்கள் வைத்து ஆய்வு மேற்கொண்டு புற்றுநோய்க்கான மருந்து தயாரிக்க அவர் திட்டமிட்டு இருந்தார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சின்னதம்பி ராஜாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புலித்தோல் உண்மையானது தானா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த புலித்தோலை ஆய்வகத்தில் பரிசோதனை செய்ய உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி சின்னதம்பி ராஜாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட புலித்தோல் டிஎன்ஏ பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வேட்டையாடியதாக ஹரியானாவை சேர்ந்த ரத்னா, மங்கல், கிருஷ்ணா மற்றும் ராமசந்தர் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 6 பேரை வனத்துறையினர் கைது செய்து இருந்தனர். இவர்களிடம் இருந்து புலித்தோல், சிறுத்தை தோல், எலும்புகள், நகங்கள், பற்கள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் இவர்கள் ஹரியானா மாநலம் பஞ்சுக்குல்லா பகுதியை சேர்ந்த வேட்டை தொழிலை அடிப்டையாக கொண்ட பழங்குடியினர் என்பதும், இந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் தான் சுதந்திரம் அடைவதற்கு முன்பு மன்னர், ஆங்கிலேயர்கள் வேட்டையாட வனத்துக்குள் சென்றபோது உதவி செய்த தகவலும் வெளியானது.
அதோடு கைதான அனைவரும் கடந்த 2012ம் ஆண்டு கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலில் டே்வடையாடிய வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று திரும்பியதும் தெரியவந்தது. அதன்பிறகு தற்போது கோவையில் புலித்தோலுடன் நாட்டு வைத்தியர் சின்னத்தம்பி ராஜா வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications