கோவை மாவட்டத்தில் மட்டும் 1,57,575 மனுக்களுக்கு தீர்வு! நெஞ்சை நிமிர்த்தி அமைச்சர் உதயநிதி பெருமிதம்
கோவை: கோவை மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 575 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எல்லா அமைச்சர்களும் தன்னிடம் தங்கள் மாவட்டத்துக்கு வருமாறு தேதி கேட்டுக் கொண்டிருக்க, கோவைக்கு மட்டும் தாம் தேதிக் கேட்டு விரும்பி வந்ததாக அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டிலேயே அதிக அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற முதல் மாவட்டமாக கோயம்புத்தூர் மாவட்டம் திகழ்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;

1,57,575 மனுக்களுக்கு தீர்வு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் 25,042 பயனாளிகளுக்கு, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களிடருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதன் விவரங்களை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதில் இதுவரை 1,57,575 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

24 மணிநேரமும்
கோயம்புத்தூர் மக்களின் புகார்களை உடனுக்குடன் பெற்று, அவற்றின் மீது தீர்வு காணும் வகையில், 24 மணிநேரமும் இயங்கும் கட்டுபாட்டு மையம் திறக்கப்பட்டு, பொதுமக்களின் குறைகள் கேட்டறியபட்டு, தீர்வு காணப்பட்டு வருகிறது. மிககுறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்த மின்சாரத்துறை அமைச்சருக்கும், மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், அரசுத்துறை அலுவலர்களுக்கும் என்னுடைய நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டிலேயே முதலிடம்
கோவை மாவட்டத்தில் மட்டும் மொத்தம் மூன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மூலமாக ரூ.1089 கோடி செலவில் 1413 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ரூ.1540 கோடி மதப்பீட்டிலான 6800 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 1,60,000 பயனாளிகளுக்கு, ரூ.1600 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாட்டிலே அதிக அரசு நலத்திட்ட உதவிகள் பெற்ற முதல் மாவட்டமாக கோயம்புத்தூர் மாவட்டம் விளங்கி வருகிறது.

என்னை சந்திக்கலாம்
விளையாட்டு நலத்துறைகளின் சார்பில் உங்கள் தொகுதியில் எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னை சந்தித்து தெரிவிக்கலாம். அக் கோரிக்கைகள் மீது தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். இவ்வாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications