ஸ்டாலின் போட்ட உத்தரவு? தொகுதி மாற்றம் ஏன்? - மவுனம் உடைத்த செந்தில் பாலாஜி

Subscribe to Oneindia Tamil

கோவை: அதிமுகவில் தைரியமானவர்கள் இருந்தால் என்னை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் காட்டச் சொல்லுங்கள் என்று செந்தில் பாலாஜி சவால் விட்டுள்ளார்.

கரூர் தொகுதிதான் செந்தில் பாலாஜியின் 'ஹாட் ஸ்பாட்' ஆக கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வந்தது. 2006, 2011, 2021 ஆகிய 3 கரூர் சட்டப்பேரவை தேர்தலிலும் இவரே இங்கே வெற்றியாளர். மேலும் அரவக்குறிச்சி 2019இல் இடைத்தேர்தலில் செந்தில் பாலாஜி திமுக சார்பில் போட்டியிட்டு 97 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். 2016இல் அதே தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வென்றார்.

ஆக, இந்தக் கரூர் பகுதியில் இவரை மீறி ஒருவரும் வெற்றி பெற முடியாது என்பது எழுதப்படாத சட்டமாக இருந்தது. ஆனால், இவ்வளவு செல்வாக்குள்ள தனது சொந்த தொகுதியைவிட்டு விட்டு, இந்த 2026 தேர்தலில் கோவை தெற்குத் தொகுதிக்குச் செந்தில் பாலாஜி இடம்பெயர்ந்துள்ளார். இந்த மாற்றம் பலரையும் உற்று நோக்கச் செய்துள்ளது.

Senthil Balaji

குறிப்பாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கண்களை உருத்தும் விஷயமாக இது மாறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் செந்தி பாலாஜிக்கும் அண்ணாமலைக்குமான பனிப்போர் உச்சத்திலிருந்து வருகிறது. இந்த முறை அவர் தொகுதி மாறியதற்குப் பின்னால் தோல்வி பயமே காரணம் என்று ஒரு கதையை அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார்.

மேலும் கரூர் பகுதியைச் சேர்ந்த 18 வேட்பாளர்களைக் கோவை தெற்குத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் அனைவரின் முகவரியும் கரூரை மையாகக் கொண்டுள்ளது. அந்த ஊரிலிருந்து ஏன் கோவைக்கு வந்து போட்டியிட வேண்டும்? இவர்களை மறைமுகமாகச் செந்தில் பாலாஜியே நிறுத்தியுள்ளார்.

ஒரு வேட்பாளருக்காகத் தேர்தல் ஆணையத்தின் மூலம் வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனச் செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார் என்று பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார் அண்ணாமலை. கரூரில் 2 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, கடந்த 2021இல் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

அதிமுகவில் இருந்தபோது 80 ஆயிரத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்ற இவர், திமுக சார்பில் போட்டியிட்டபோது ஒரு லட்சத்திற்கும் (101,757) மேலான வாக்குகளை பெற்றார். அவர் செல்வாக்கு திமுகவுக்கு வந்த பிறகு கூடியது என்பதற்கு இது ஒரு சான்று.

கரூர் சம்பவம் தந்த அச்சமா?

கரூர் என்பது நீண்ட பாரம்பரியமுள்ள தொகுதி. 1952இல் நடந்த நாட்டின் முதல் பொதுத் தேர்தலிலிருந்து உள்ள சட்டமன்றத் தொகுதியாகும். 1967 வரை காங்கிரஸ் கோட்டையாக இருந்த இது பிறகு மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக கைக்கு மாறியது. கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி 2011 உருவான புதிய தொகுதியாகும். இங்கு நடைபெற்ற முதல் தேர்தலில் அதிமுக வென்றது.

2016லும் அதிமுக வேட்பாளர் அம்மன் கி.அர்ஜுனன் வென்றார். 2021இல் இத்தொகுதிக்கு கமல்ஹாசன் போட்டியிட்டதால் ஒரு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. முடிவு என்னவோ பாஜகவுக்கு சாதகமாக அமைத்து வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். கமல்ஹாசன் தோல்வியைப் பலரும் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் பாஜக கோவை மாவட்டத்தில் பல ஆண்டுகளாகவே செல்வாக்குப் பெற்ற கட்சியாகவே கருதப்படுகிறது.

கமல்ஹாசன் நின்று தோல்வியைத் தழுவிய பாஜகவின் செல்வாக்கு மிக்க தொகுதியில் இப்போது செந்தில் பாலாஜி களம் கண்டுள்ளார். அது பாஜகவுக்கு ஒரு நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அண்ணாமலைக்கு அரசியல் ரீதியான ஒரு அறைகூவலைச் செந்தில் பாலாஜி விட்டுள்ளார் என்றே நம்பப்படுகிறது.

மற்றொரு பக்கம் கரூரில் விஜய்யின் தவெக நடத்திய பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னணியில் எதிர்க்கட்சிகள் செந்தில் பாலாஜியை இணைத்து புகார் கூறினர். இதனால் ஒருவேளை வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தால்தான் கோவைக்கு மாறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், இதைச் செந்தில் பாலாஜி முற்றிலுமாக மறுக்கிறார். எங்கள் கட்சிக்குத் தொடர்பில்லாத ஒருவர் செய்த தவறுக்காக என் மீது பழி போடுவது என்ன நியாயம்? யாரை நிறுத்திக் கேள்வி கேட்க வேண்டுமோ அவரை விட்டுவிட்டு என்னைக் கட்டம் கட்டுவது சரியா? என்றும் கேட்டுள்ளார்.
இந்தத் தொகுதி மாற்றம் என்பது 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகே முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவு என்றும் அதற்கும் அந்தத் துயரச் சம்பவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றும் மறுத்துள்ளார் செந்தில் பாலாஜி.

கொங்கு அதிமுக கோட்டையா?

"நான் தொகுதி மாறி போட்டியிடுவதைக் கேட்கும் அதிமுகவினர் யாரும் தொகுதி மாறி போட்டியிட்டதே இல்லையா? தைரியம் உள்ள அதிமுகவிலிருந்தால் என்னை எதிர்த்துப் போட்டியிடலாமே? ஏன் அதைச் செய்யவில்லை? தைரியம் இருந்தால் இந்தமுறை கரூரில் வெற்றி பெற்றுக் காட்டச் சொல்லுங்கள் பார்ப்போ? அது முடியுமா?

பாண்டிச்சேரியில் பிறந்த ஒருவர் தி நகரில் போட்டியிடுகிறார்? அதை விமர்சிக்க மாட்டார்கள். நான் கோவையில்தான் கடந்த 4 ஆண்டுகளாகக் கட்சி பணி செய்து வருகிறேன். நான் நின்றால் குற்றமா? தவெக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலன். அந்தக் கட்சிக்கு முதலில் எந்தளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பது இந்தத் தேர்தலில் தெரிந்துவிடும். பிறகு அதைப் பற்றிப் பேசலாம்" என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகக் கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டை என்ற ஒரு பார்வை முன்வைக்கப்படுகிறது. அதையும் செந்தில் பாலாஜி மறுக்கிறார். கோட்டை என்றால், அதிமுகவுக்கும் திமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் என்ன என்று பார்க்க வேண்டும். "கடந்த 2021 தேர்தலில் கொங்குப் பகுதியில் திமுக குறைந்தது வாக்கு வித்தியாசத்தில்தான் தோற்றது. 1500 முதல் 4000 வரையான வித்தியாசம்தான்.

அப்படியானால் இது எப்படி அதிமுக கோட்டையாகும்? கோட்டை என்றால் மக்களவையில் அதிமுக ஏன் ஒரு தொகுதியிலும் வெல்ல வில்லை? கோவையில் 33 பேரூராட்சி உள்ளது. அதில் 31 பேரூராட்சியை திமுக வென்றது. 7 நகராட்சியிலும் வெற்றிபெற்றுள்ளோம். இது எப்படி அதிமுக பெல்ட் ஆகும்?" என்கிறார் செந்தில் பாலாஜி.

-கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+