யானைகள் தினத்தன்று நேர்ந்த கொடுமை.. கோவை அருகே ரயில் மோதி தாய், குட்டி யானை உயிரிழப்பு!
கோவை: கோவை அருகே தமிழ்நாடு - கேரளா எல்லையில் ரயில் மோதி 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் பகுதியில் யானைகள் தண்டவாளத்தை கடந்த போது, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தாய் மற்றும் குட்டி யானை உயிரிழந்தன. யானைகள் தினத்தன்று 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு - கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை உயிரிழந்த கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 11.30 மணியளவில் வாளையர் - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையில் வேகமாக வந்து கொண்டிருந்து இருக்கிறது. அப்போது தாய் மற்றும் குட்டி யானை தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றன.

இதனால் எதிர்பாராத வகையில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. கோவையில் எல்லையில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் நடந்த விபத்து அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து வேறொரு என்ஜின் வரவழைக்கப்பட்டு, தண்டவாள பாதையில் திருப்பி விடப்பட்டது.
தொடர்ந்து என்ஜினில் சிக்கி இருந்த தாய் மற்றும் குட்டி யானையை விபத்து நடந்த இடத்தில் இருந்து அதிகாலை 3 மணியளவில் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக வனத்துறை, மருத்துவக் குழுவினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இந்த விபத்து தொடர்பாக பாலக்காடு ரயில்வே போலீஸ் மற்றும் கேரளா வனத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தாய் மற்றும் குட்டி யானை அடக்கம் செய்யப்பட உள்ளது. யானைகள் தினமான ஆகஸ்ட் 12ஆம் தேதி ரயில் மோதி 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் தூரத்திற்கு யானை உடல்கள் இழுத்து செல்லப்பட்ட துயரமும் நேர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications
