‘நோ ஆயில்..நோ பாயில்..’ அடுப்பு இல்லாமல் சமையல்! 2100 வகையான டிஷ் ரெடி! தமிழன் உலக சாதனை!
கோவை: அடுப்பில் சமைக்காமல் 2100 வகையான உணவு வகைகளை ஒருவர் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். அவரது உணவகத்திற்கு மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
'நோ ஆயில் நோ பாயில்' என்ற கான்செப்ட் உடன் கோவையில் உள்ள உணவகம் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இங்கே பரிமாறப்படும் எந்த உணவையும் இவர்கள் சமைப்பது இல்லை. ஆயில் சேர்க்காமல் சமையல் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், அடுப்பே இல்லாமல் சமையல் செய்து அசத்தி வருகிறது இந்த உணவகம். அது எப்படி?

இந்தக் குறிப்பிட்ட உணவகம் கோவை சிங்காநல்லூர் பகுதியில்தான் செயல்பட்டு வருகிறது. இதற்கு 'படையல்' என்று பெயர்வைத்துள்ளனர். இங்கே உள்ளே நுழையும்போதே மேலே உள்ள பலகையில் 'அடுப்பில்லா எண்ணெய் இல்லா உணவகம்' என்று எழுதிப் போட்டுள்ளனர். இது ஒரு இயற்கை உணவகம். கடந்த 4 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
எண்ணெய் இல்லாமல் சமையல் என்பதுகூட பலரை ஈர்க்கும்படியாக இருப்பதில்லை. பலரும் ஆயில் இல்லாமல் உணவுகளை உட்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்த உணவக உரிமையாளரோ மேலே ஒருபடி முன்னேறி அடுப்பும் நெருப்பும் இல்லாமல் தடபுடலாகச் சமையல் செய்து அசத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் கேஸ் சிலிண்டரின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் காலத்தில் இவர், அடுப்பைப் பற்றவைக்காமல் ஆகாரம் தயாரிக்கிறார் என்றால் சும்மாவா?

இவர்கள் சமைக்கும் உணவுப் பண்டங்கள் தண்ணீரில் ஊறவைக்கப்பட்டு, அதன்பின்னர் அதைப் பதப்படுத்தி சத்துகள் குறையாமல் அப்படியே பசுமையாகப் பரிமாறுகிறார்கள். மதிய அரிசி சாப்பாட்டுக்கு மாற்றாக ஊறவைத்த சிறுதானியத்தை அவலாக மாற்றி அதை அப்படியே கொடுக்கிறார்கள். இங்கே செய்யப்படும் சாம்பார், மோர்க் குழம்பு, வத்தல் குழம்புகள் என எவையும் அடுப்பில் தயாராக்கப்படுவதில்லை. அப்படியே நேரடியாகச் சமைக்கப்பட்டுப் பரிமாறப்படுகின்றன.
இந்த உணவகத்தில் 48 நாட்கள் மண்டல வாழ்வியல் மாற்றத்திற்கான பயிற்சி திட்டமும் செயல்பட்டு வருகிறது. இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த உணவகம் பற்றி அதன் உரிமையாளர் சிவக்குமார், "மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுனி, தூய மல்லி, இலுப்பைப்பூ சம்பா இப்படி 30 வகையான அரிசி வகைகளை அரைத்து அவல் வகையாக மாற்றி சாதமாகத் தருகிறோம்.
அதேபோன்று 21 வகையான நாட்டுக்காய்கறிகளைச் சாம்பார், மோர் குழம்பு,வத்தல் குழம்பு எனப் பல வகைகளைப் பரிமாறி வருகிறோம். மேலும் மூலிகை குணம் கொண்ட வல்லாரை,தூதுவளையில் ரசம் செய்து கொடுக்கிறோம். கூடுதலாகக் கூட்டு, பொரியல், பச்சடி என வகைவகையாக செய்து தருகிறோம். இவை இல்லாமல் செம்பருத்தி, தாமரை, ரோஜா பூ போன்றவற்றில் வரவேற்பு பானங்கள் செய்து தருகிறோம்" என்கிறார்
இதுவரை சிவக்குமார் எண்ணெய், மட்டும் நெருப்பின் உதவி இல்லாமல் 2100 வகையான சமையல்களைச் செய்து உலக சாதனை செய்துள்ளார். ஆகவே, வாடிக்கையாளர்கள் ஒரு மனமாற்றத்திற்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் இங்கே வந்து அதிக அளவில் உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.
இதன் வாடிக்கையாளரான செந்தில்குமார், "வழக்கமா நெருப்பில் சமைக்கவில்லை என்றால் பச்சை வாடை அடிக்கும் என்பார்கள். ஆனால், அப்படி எந்த வாசனையும் இந்த உணவில் இல்லை. நன்றாகவே இருக்கிறது. வழக்கமாக ஹோட்டல்களில் சாப்பிட்டால் 4 மணிநேரம் பசி இருக்காது. இந்த உணவைச் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குள் மீண்டும் பசிக்க ஆரம்பித்துவிடுகிறது" என்கிறார்.

இந்த உணவகத்தில் எதிர்பாராமல் போய் சாப்பிட்ட அனுபவம் பற்றி ஈரோடு மகேஷ், "நெருப்பு இல்லாமல் சமைக்கலாம். அதை நாம் ருசித்துச் சாப்பிட வேண்டும் இல்லையா? அதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்கள் இவர்கள்" என்கிறார். இங்கே வழங்கப்பட்ட ரோஸ்மில்க் தான் இவரது ஃபேவரைட் என்கிறார்.
இந்த வகையான உணவுகளைச் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? அல்லது குறையுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சிவக்குமார், "உடல் எடை கூடுகிறதா? குறைகிறதா என்பது முக்கியம் இல்லை. உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா என்பதுதான் முக்கியம். இதைப் போன்ற இயற்கை உணவு உங்களை ஆரோக்கியமாக மாற்றும்" என்கிறார். இவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார். இந்த உணவகத்திற்கு இந்தியாவைத் தாண்டி பல வெளிநாட்டினர் வந்து சாப்பிடுகிறார்கள். இந்த உணவு முறையே ருசியாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications