டப்பிங் முதல்வருக்குதான் தேவை.. பாஜகவிற்கு கிடையாது.. அண்ணாமலை ஆவசேம்
கோவை: முதலமைச்சருக்கு தான் டப்பிங் தேவைப்படுகின்றது. பாஜகவிற்கு எங்கேயும் டப்பிங் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், ரத்தினம் டெக்னோ பார்க் வளாகத்தில் நடைபெற்ற ரோட்டரி கிளப் மாநாட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்கள் சுமார் 100 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பை வழங்குகிறது. அதனால் அவை முக்கியமாக உள்ளது. கடந்தாண்டு இந்திய நிறுவனங்கள் யுகேவில் அதிகளவு வேலைவாய்ப்பை வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு அதிக அளவில் இந்திய மாணவர்கள் சேர்ந்துள்ளனர். விமானங்கள், துறைமுகங்கள் ஆகியவை மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கான விதைகளை விதைத்துள்ளோம். பாகிஸ்தான், சீனா அண்டை நாடாக இருப்பதால், பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கி உள்ளோம். உலக அளவில் உள்ள மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதற்கு ரபேல் ஒரு உதாரணம்.
புவியியல் அரசியல் எந்தளவிற்கு நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு அதிகளவில் முதலீடு செய்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கட்டுப்படுத்துபவர்கள் எதிர்காலத்தை கட்டுபடுத்துபவர்கள்.
இதைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமெரிக்காவில் 29 லட்சம் இந்தியர்கள் இருக்கின்றனர்.
7.50 லட்சம் பேர் உரிய ஆவணம் இன்றி இருக்கின்றனர் என அமெரிக்கா சொல்கின்றது. மெக்ஸிகோவில் இருந்து சட்ட விரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றவர்கள் தற்போது திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அமெரிக்காவின் சட்டதிட்டங்களின் படி விமானத்தில் திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கின்றனர்.
பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசும்போது "டாங்கி ரூட்" வழியாக செல்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். இவர்கள் குறித்து பேசி குளோபல் ஹியூமன் டிராபிக்கினை தகர்த்து எறிவது பற்றி பேசி இருப்பதாக சொல்லி இருக்கின்றார். அமெரிக்காவில் இருத்து திருப்பி அனுப்பப்படும் இந்தியர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகள் செய்யப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லியிருக்கிறார்.
சட்டவிரோத வழியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அமெரிக்க சென்று இந்தியர்கள் யாரும் மாட்டிக் கொள்ள வேண்டாம். இவர்கள் டிரம்ப் அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பு உள்ளே செல்ல முயன்றவர்கள். தற்பொழுது திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
மத்திய பட்ஜெட்டில் நேரடி நிதி பகிர்வின் மூலம் நிதி வந்து விடுகிறது. இது அனைவருக்கும் தெரியும். முதியோர் உதவித்தொகை, ஏழைகளுக்கான வீடு திட்டம் , முத்ரா பயனாளிகள் என ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் மூலம் நடத்தப்படுகிறது. தமிழகத்திற்கு இரண்டரை மடங்கு முதல் மூன்று வரை மடங்கு வரை நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது.
எந்த அடிப்படையில் தமிழகத்திற்கு பட்ஜெட்டில் எதுவும் கொடுக்கவில்லை என முதல்வர் சொல்கிறார் என கேள்வி எழுப்பிய அவர், தமிழக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என கேள்வி எழுப்பினார். மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக இருக்கிறது. நீங்கள் மத்திய பட்ஜெட்டை பேசுங்கள். நாங்கள் மாநில பட்ஜெட்டை பேசுகிறோம். தமிழக மக்களுக்கு யார் எவ்வளவு கொடுத்திருக்கின்றனர் என்பது தெரியட்டும்.
பாஜகவின் டப்பிங் எடப்பாடியார் என முதல்வர் சொல்லி இருப்பது குறித்த கேள்விக்கு, முதலமைச்சருக்கு தான் இன்று டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலை போல அறிவாலயத்தில் இருந்து பல பேர் பேசிக் கொண்டிருக்கின்றனர். பாஜகவிற்கு எங்கேயும் டப்பிங் கிடையாது. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
டப்பிங் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் உதயநிதிக்கு தான் தேவைப்படுகிறது. கதை திரைக்கதை வசனத்திற்காக அதிமுகவில் இருந்து திமுகவிற்கு இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றனர். திமுகவில் இருக்கும் அமைச்சர்கள் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். இந்து சமய அறநிலையத்துறை சிஏஜி ஆடிட்டிற்கு ஆவணங்களையே கொடுப்பதில்லை. காவி வேட்டியை கட்டிக்கொண்டு சேகர்பாபு பேசுவார். தைரியம் இருந்தால் சிஏஜி ஆடிட் அறிக்கையை கொடுங்கள் பார்க்கலாம்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு ஏர்ஷோவை ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை. இவர் மணிப்பூர் பாலிடிக்ஸ் பத்தி பேசுகிறார். மணிப்பூர் குறித்து என்ன சொன்னாலும் முதல்வருக்கு புரியாது. ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்தம் என்ற காவல்துறை அதிகாரி ஒரு சுற்றறிக்கை கொடுத்திருக்கிறார். அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்திருக்கிறார். அந்த சுற்றறிக்கையை நான் கொடுக்கிறேன். தமிழக முதல்வர் பகல் கனவு காண்கிறார். கோபாலபுரத்தில் உள்ள பெண்களை தாண்டி வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications