ஈஷாவில் “டுவிஸ்ட்”.. சிவராத்திரியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்! ஜக்கி - அண்ணாமலையுடன் அதிமுக எம்பி
கோவை ஈஷா யோகா மைய மகா சிவராத்திரி விழாவில் ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்பியும் ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொண்டு இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்றிரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டோர் பங்கேற்று இருக்கும் நிலையில், ஓபிஎஸ் மகனும் அதிமுக எம்பியும் ஓ.பி.ரவீந்திரநாத் கலந்துகொண்டு இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் இந்த மையத்துக்கு சென்று வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சிவராத்திரையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் விடிய விடிய இசை, கலை நிகழ்ச்சிகளுடன் சிவராத்திரி விழா நடைபெற்றது. இதேபோல் கோவை ஈஷா மையத்திலும் மகா சிவராத்திரி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

மகா சிவராத்திரி
இதில் மூத்த அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் ஆண்டுதோறும் கலந்துகொண்டு வருகிறார். இதில் ஜக்கி வாசுதேவ் ஆடும் நடனம் மிகவும் பிரபலம். அந்த வகையில் நேற்றும் ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.

திரௌபதி முர்மு
இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டார். அவரது வருகையை முன்னிட்டு கோவை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அத்துடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள், நடிகைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பூஜை செய்து, நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.

அண்ணாமலை
பல முன்னணி செய்தி ஊடகங்களில் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற இந்த மகா சிவராத்திரி விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஜக்கி வாசுதேவுடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்று அதிகளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பாஜகவினருடன் ஓபிஆர்
அதில் ஜக்கி வாசுதேவ், மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவை சேர்ந்த தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் இருக்கிறார்கள். அவர்களுடன் அதிமுக எம்பியும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத்தும் நிற்கிறார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டனர்.

கட்சியில் இருந்து நீக்கம்
அடுத்த சில நாட்களிலேயே ஒ.பன்னீர்செல்வத்தின் மகனும், அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்தையும் கட்சியில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. இதனை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அனுப்பிய பழனிசாமி தரப்பு ரவீந்திரநாத்தை அதிமுக எம்பி என்று குறிப்பிடக்கூடாது என வலியுறுத்தினார்.

அதிமுக எம்பியாகவே தொடர்கிறார்
ஆனால் அவர் இன்று வரை ரவீந்திரநாத் அதிமுக எம்பி என்றே நாடாளுமன்றத்தில் குறிப்பிடப்பட்டு வருகிறார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைபாட்டில் உள்ளதாக கூறப்படும் ரவீந்திரநாத் அக்கட்சியினரும் ஈஷா சிவராத்திரியில் பங்கேற்று புகைப்படம் எடுத்துக்கொண்டது பேசு பொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications