Myv3 ads நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா?.. கோவை மாநகர போலீஸின் முக்கிய அறிவிப்பு
கோவை: விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என்று கூறியதை நம்பி, கோவை Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும். அதனை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். முதலீடு விஷயங்களில் எப்போதுமே கவனமாக இருப்பது நல்லது. போஸ்ட் ஆபிஸ், அரசு சார்பில் செயல்படுத்தப்படும் சேமிப்புகளில் முதலீடு செய்வது நம்முடைய பணம் பாதுகாப்பாக இருப்பதற்கான உத்தரவாதத்தை அளிக்கும். குறைந்த வட்டியாக இருந்தாலும் ஒரு நல்ல தொகையுடன் நமக்கு குறிப்பிட்ட காலத்தில் கட்டாயம் திரும்ப கிடைக்கும்.

அதிக வட்டி, இரட்டிப்பு லாபம், குறைந்த நாட்களில் பெரிய தொகை திரும்பக் கிடைக்கும், முதலீட்டுடன் கூடிய அதிக வட்டி பணம் என்றெல்லாம் ஆசையை காட்டி பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்து பல நிறுவனங்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள் முதலீடு செய்வதைப் பார்த்து பலரும் அதில் முதலீடு செய்கின்றனர். குறிப்பிட்ட காலம் வரை பணத்தை தருவதுபோல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு கோடிக்கணக்கில் மோசடிகளில் ஈடுபட்டு தப்பிச் செல்கின்றனர்.
அந்த வகையில், அண்மையில் கோவையை தலைமையிடமாக கொண்டு வந்த வர்த்தக நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையை தலைமையிடமாக கொண்டு MYv3 ads என்ற வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் தங்களுடைய மொபைல் போன் மூலமாக மை வி3 ஆட்ஸ் என்ற செயலி மூலமாக விளம்பரங்களைப் பார்த்தால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு கீழே மேலும் பலர் இணைவதன் மூலமாக கூடுதல் தொகை, வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு போன்றவை வழங்கப்பட்டு வந்தது.
இதுபோன்ற பல்வேறு திட்டங்களைக் கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக் கணக்கில் இந்த நிறுவனம் முதலீடுகளைப் பெற்றது. இந்நிலையில் இந்த நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்தன. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை கோவை மாநகர போலீசார் விசாரித்து வந்தனர். ஏராளமான மக்கள் இதில் முதலீடு செய்துள்ளதால் மோசடி தொகை அதிக அளவில் இருக்கும் என்பதாலும், பல்வேறு மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இருப்பதாலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளார். இந்நிலையில் இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பப் பெறாதவர்கள் கோவை பொருளாதார குற்றப் பிரிவிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்திலும் உடனடியாக அசல் ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கோவை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் Myv3ads நிறுவனம் 19 கிளை நிறுவனங்களுடன் செயல்பட்டு வந்தது. இது தவிர கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இயங்கி வந்தது.
மோசடி புகாரை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு இருக்கும் நிலையில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications