கோவை வந்த பிரதமர் மோடி.. விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற அரசியல் தலைவர்கள் யார்? லிஸ்ட்
கோவை: தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வந்துள்ளார். ஆந்திராவில் இருந்து தனி விமானம் வாயிலாக கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வரவேற்றுள்ளனர். அதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
கோவை கொடிசியா மைதானத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நடக்கவுள்ளது. இதனைதொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக கோவை வந்திருக்கிறார். பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரதமர் மோடி முதல்முறையாக கோவை வந்துள்ளதால், அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி காருக்குள் இருந்தவாறு பாஜகவினருக்கு கைகளை அசைத்து நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது பிரதமர் மோடியை பார்த்த உற்சாகத்தில் பாஜகவினர், இன்று பீகார்.. நாளை தமிழ்நாடு என்று கோஷம் எழுப்பி வருகின்றனர். அதேபோல் பிரதமர் மோடியின் கார் மீது பூக்களை தூவி வரவேற்று வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கிறது.
இம்முறை அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடியின் முதல் தமிழ்நாடு பயணமாக இது அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலமாக கோவை வந்தார்.
கோவை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் சாமிநாதன், கோவை ஆட்சியர் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரும் வரவேற்றனர்.
அதேபோல் பாஜக தரப்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை ஆகியோர் வரவேற்றுள்ளனர். பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது அதிமுக உடனான கூட்டணி விவகாரங்கள் குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் என்டிஏ கூட்டணியின் அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் விவாதிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications