கோவை சூலூரில் பயங்கரம்.. பெண்ணை சுத்தியலால் தாக்கி கொடூர கொள்ளை.. திக் திக் சம்பவம்
கோவை: கோவை மாவட்டம், சூலூரில் பெண்ணை சுத்தியலால் கொடூரமாகத் தாக்கி நகைப் பறிப்பில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொது இடங்களில் நகைகள் அணிந்து செல்லவே அச்சப்படும்படி ஏராளமான சம்பங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகளில் நடந்து செல்லும் பெண்கள், மூதாட்டிகள், பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்து செல்லும் பெண்கள், தனியாக நடந்து செல்வோர் ஆகியோரைக் குறிவைத்து நகை திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை, சூலூரில் சிகரெட் வாங்குவது போல வந்து பெட்டிக் கடையில் இருந்த பெண்ணை சுத்தியலால் கொடூரமாகத் தாக்கி, 4 பவுன் நகை கொள்ளை அடித்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுகந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மனைவி மேரி ஜூலியானா (47), பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை அன்று சிகரெட் வாங்குவதாகக் கூறி இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், மேரி ஜூலியானாவை சுத்தியலால் தாக்கி, அவரிடமிருந்து 4 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர்.
இதில், படுகாயமடைந்த மேரி ஜூலியானா, கோவை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில், சூலூர் இன்ஸ்பெக்டர் செல்வராகவன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தனிப்படையினரின் தீவிர விசாரணையில், கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (62), தற்போது ஆந்திராவின் ஹைதராபாத்தில் வசிப்பவர், மற்றும் பீகார் மாநிலம் சுபாவின் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் சாணி (22) ஆகியோர் சூலூர் ராசி பாளையம் பகுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு முக்கிய குற்றவாளியையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் சூலூரில் பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம் எனவும் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவத்தில் மேலும் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, அல்லது வேறு குற்றச் சதித்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்து ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது.
மூன்று குற்றவாளிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படம் என்றும், விசாரணைக்குப் பின்னர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications