பதறிப்போன உக்கடம்.. காலையிலேயே குவிந்த போலீஸார்.. இளைஞர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் அதிரடி சோதனை
கோவை: கோவை, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் தங்கியுள்ள இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குற்றச் சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், ஐடி பணியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளைக் குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்தில் கூட கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புதிய வகை கஞ்சா ஆயில், கஞ்சா, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கல்லூரி மாணவர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோவை புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களில் சிறப்பு தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 6 கிலோ கஞ்சா, 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 42 திருடப்பட்ட நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனங்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சோதனையின்போது கஞ்சா விற்பனை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட 8 கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள், இளைஞர்களுக்கு வீடு வாடகைக்கு விடும்போது உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டும், அவர்களது பின்புலத்தை விசாரித்த பின்பே வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோவையில் உக்கடம், ராமநாதபுரம், குனியமுத்தூர் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள் வசித்து வரும் அறைகளில் போலீஸார் இன்று காலை திடீர் சோதனை நடத்தினர். வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.
பின்னர், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அடிக்குமாடி குடியிருப்புகளில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட போலீசார் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
தீபாவளி பண்டிகைக்காக பெரும்பாலோனோர் சொந்த ஊர்களுக்குச் சென்றிருக்கும் நிலையில், ஊருக்கு செல்லாமல் அறைகளிலேயே தங்கி இருப்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த திடீர் சோதனை காரணமாக கோவையில் பல்வேறு இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications