தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்வில் பவர்கட்.. மொபைல் டார்ச் அடித்து மோதிரம் வழங்கிய அதிகாரிகள்
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் இன்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்க விழாவில் மின் தடை ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் போடப்பட்டது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையில் 'தங்க மோதிரம்' வழங்கப்படும் என்று தவெக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அரசு இத்திட்டத்திற்காக ரூ.755.83 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று மதுரையில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுரை மாவட்டத்தில் பிறந்த 25 குழந்தைகளுக்கு முதல்வர் விஜய் தங்க மோதிரங்களை அணிவித்து இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார். விழாவில் பல குழந்தைகள் மற்றும் தாய்மார்களுடன் முதல்வர் விஜய் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர்கள் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு மோதிரங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் இன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழாவில் மின் தடை ஏற்பட்டதால் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. எனினும், அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சென்ற பிறகு, மருத்துவர்கள், பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கியபோது இச்சம்பவம் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications
