கோவையில் பொதுக் கழிப்பிடத்துக்கு அண்ணா, கக்கன் பெயர்.. சர்ச்சையானதையடுத்து நீக்கம்
கோவை: கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள பொதுக் கழிப்பிடத்தில் மூத்த தலைவர்களான அண்ணா, கக்கன் பெயர் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சையானதைத் தொடர்ந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இதில், 95 ஆவது வார்டு அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்தக் கழிப்பிடத்தில் சமீபத்தில் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கக்கன் பெயரும் எழுதப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுக் கழிப்பிடத்துக்கு மூத்த தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கோவை மாநகராட்சியில், முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாதுரை மற்றும், பெருந்தலைவர் காமராஜர் அமைச்சரவையில் பணியாற்றிய நேர்மையான தலைவர் கக்கன் ஆகியோர் பெயரை, கழிப்பறைக்கு வைத்திருக்கிறார்கள்.
எளிமையான இரண்டு தலைவர்களை அவமதிக்கும் கோவை மாநகராட்சியின் இந்த தரம்தாழ்ந்த செயலுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் பேருந்து நிலையங்கள், அரசு கட்டிடங்களுக்கெல்லாம் தனது தந்தை பெயரை வைத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரை விட மகத்தான தலைவர்கள் பெயரை, கழிப்பறைக்கு வைப்பது, அவர்களை அவமானப்படுத்தும் நோக்கமே அன்றி வேறென்ன?.
உடனடியாக, கழிப்பறையில் இருந்து தலைவர்கள் பெயரை அழிக்க வேண்டும் என்றும், இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்சாலினை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் அந்த கழிப்பிடத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தற்போது இந்த கட்டடத்திற்கு புதிதாக வண்ணம் பூசப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் பெயர்கள் எழுதியதாக கூறப்படுகிறது என்றார்.
அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பிய நிலையில், கழிவறையில் எழுதப்பட்டிருந்த மூத்த தலைவர்களின் பெயர்களை மாநகராட்சி நிர்வாகம் பெயிண்ட் கொண்டு அழித்துள்ளது.












Click it and Unblock the Notifications