ஜெய்பீம் திரைப்படம் போல் ஆதிக்கம்..ஆட்சியரிடம் புகார் அளித்த.. பழங்குடி மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

கோவை: யானை விரட்டும் வனக் காவலராகப் பணியாற்றியோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, தனது மகனின் 15 மாத சம்பள பாக்கியை கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், தன்னை அலைக்கழித்து துளியும் மதிக்காமல், புகார் கொடுத்ததற்கு அழைத்து மிரட்டி பயமுறுத்திவரும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழங்குடி மூதாட்டி முதல்வர் மற்றும் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்துள்ளது காந்தவயல் மலைவாழ் கிராமம். இப்பகுதியில் பழங்குடியினரான வள்ளியம்மாள் (65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவரது மகன் அன்புராஜ் வனத் துறையில் யானை விரட்டும் காவலராக தற்காலிகமாக பணிபுரிந்து தனது குடும்பத்தையும் பெற்றோரையும் கவனித்து வந்தார்.

coimbatore

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனப் பகுதியில் தவறி விழுந்ததில் அவரது வலது கால் எலும்பு மிக மோசமான நிலையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் இரண்டு மாத சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். ஆனால், அந்த சமயத்தில் சிறுமுகை வனத் துறையினரால் அவருக்கு எந்தவிதமான உதவியும் செய்யப்படவில்லை. இதனால், மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாப்பிடுவதற்கே கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.

மேலும், வாகன வசதி இல்லாத பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் வள்ளியம்மாள் தனது மகனின் மருத்துவத்தையும் பார்க்க முடியாமல் மிகவும் பல மாதங்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, வனத் துறையில் பணியாற்றியபோது தனது மகன் அன்புக்கு வர வேண்டிய சம்பள பாக்கியான 15 மாத சம்பளத்தை கேட்டு சிறுமுகை வனச்சரக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

வனச்சரக அலுவலர் மனோஜிடம்‌ பலமுறை சம்பளம் குறித்து முறையிட்டுள்ளார். பணியில் இருந்தபோது பாதிக்கப்பட்ட வனப் பணியாளரை வனச்சரக அலுவலர் மனோஜ் நேரில் சென்றும் பார்க்காமல் இருந்துள்ளார். மேலும், அவருக்கு வழங்க வேண்டிய சம்பளமும் வழங்காமல் தொடர்ந்து வள்ளியம்மாவை அலுவலகத்திற்கு வரவழைத்து காலை முதல் மாலை வரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டருக்கு மேல் நடந்தே சென்று பேருந்து வசதி இல்லாமல் பல நேரம் வனவிலங்கு அச்சுறுத்தலுடன் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதில் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார். கடந்த அக்டோபர் 9 ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறுமுகை முத்துச்சாமி திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில், வள்ளியம்மாள் தனக்கு நேர்ந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேடி அவர்களிடம் தனது மகனின் நிலையை கூறி அவனுக்கு வரவேண்டிய சம்பளத் தொகையை வழங்க கோரி மனு அளித்தார்.

மனுவானது நடவடிக்கைக்காக ஆட்சியர் உத்தரவின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலகத்திற்கு வந்தது. அப்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட வள்ளியம்மாளை விசாரணைக்கு அழைத்து முதியவர் என்று கூட பாராமல் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேல் காக்க வைத்து துளி கூட மனிதநேயம் இல்லாமல் தண்ணீர், உணவு கொடுக்காமல் கொடுமை செய்து, அச்சுறுத்தியும் பயமுறுத்தியும் உங்களுக்கெல்லாம் என் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு இவ்வளவு திமிராகிவிட்டதா? என ஆதிக்க மனப்பான்மையுடன் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், உனக்கு இதை யாரு எழுதி தந்தா? அவங்கள சொல்லு என்றும், அவர்களையும் நான் ஒரு கை பார்த்து விடுகிறேன். என்னையா கலெக்டரிடம் புகார் செய்கிறாய், உனக்கு சம்பளம் இப்போதைக்கு வராது. உங்களுக்கு வாழ்க்கை ஒரு கேடா என்று கேட்டவுடன் சம்பளம் எப்போ வரும்னு எனக்கே தெரியாது. இந்த புகார் குறித்து வெளியில் பேசினால் உன்னை குற்றவாளியாக்கி வேற மாதிரி பார்த்துக் கொள்கிறேன் என்று மிரட்டி பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்ணை பயமுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வரும் குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வரும் முதல்வரும், மாவட்ட ஆட்சியரும் 15 மாத சம்பள பாக்கியை தராமல், என்னை அலைக்கழித்து துளியும் மதிக்காமல், புகார் கொடுத்ததற்கு என்னை அழைத்து மிரட்டி பயமுறுத்திவரும் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது மகன் அன்புராஜின் 15 மாத சம்பள பாக்கியை வழங்கி எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். மேலும், வனச்சரக அலுவலர் மனோஜ் என் மகனை பழிவாங்கும் நோக்குடன் உடல்நிலை சரியானதும் பணியை நீக்காமலும், என்னையும் என் குடும்பத்தாரையும் அச்சுறுத்தாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வள்ளியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+