தூத்துக்குடி பக்கம் எட்டி பார்த்தீங்களா பழனிசாமி.. நீங்க தவழ்ந்தது நாடறியும் - செங்கோட்டையன் காட்டம்
கோவை: திமுக, தவெக இடையேதான் போட்டியே தவிர, எடப்பாடி பழனிசாமி சொல்வதை போன்ற நிலை இல்லை. எடப்பாடி பழனிசாமி எப்படி முதலமைச்சார் ஆனார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்குத் தெரியும். அப்படி இருக்கையில் தவெக தலைவர் விஜயைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றபோது எடப்பாடி பழனிசாமி நேரில் சென்றாரா என தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: விஜய் சினிமாவில் சிறந்த நடிகர். அரசியலில் நாங்கள் தான் சிறந்தவர்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், சினிமாவில் இருந்து எம்ஜிஆர் மூன்று முறை முதல்வர் ஆகியுள்ளார். ஜெயலலிதா 5 முறை முதல்வராக இருந்துள்ளார்.

திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும். வெற்றி பெற முடியும் என்ற வரலாற்றை இந்தியாவிற்கே எம்ஜிஆர், என்.டி.ஆர் ஆகியோர் உருவாக்கி காட்டினர் . இப்போது இருக்கின்ற நிலை திமுக , TVK இடையேதான் போட்டியே தவிர, அதிமுக என்ற இயக்கம் எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை போன்ற நிலை இல்லை. பிரதமர் வந்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் பேனரில் இல்லை.
யாரை நம்பி இவர் கட்சி நடத்துகின்றார். எடப்பாடி பழனிச்சாமி முகத்திற்கா ஓட்டு போடுகின்றனர். அந்தளவு செல்வாக்கு மிக்கவரா இவர். குறிப்பாக
எடப்பாடி பழனிச்சாமி எந்த தேர்தலிலும் வெற்றி பெற்றதாக வரலாறும் இல்லை. அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது. அதை உணராமல் இருக்கின்றார்.
செல்வாக்கு மிக்க தலைவரை, மக்கள் விரும்பும் தலைவராக இருப்பவரைப் பற்றி பேசுவதை ஏற்க முடியாது. ஆண்டிற்கு 500 கோடி ரூபாயை விட்டுவிட்டு மக்களுக்காகப் பணியாற்ற களமிறங்கி இருக்கின்றார். அதிமுக, திமுக என யார் வீட்டிற்கு சென்றாலும் அவர்களின் மனைவி, மகன், மகள் என அனைவரும் புதியதாக வந்துள்ள தவெக தலைவர் விஜய்க்குதான் வாக்கு என்று செல்லும் நிலை இருக்கின்றது.
எங்களது சர்வே மூலமாக தெரிந்து கொண்டது, இப்போது 40% வாக்கு எங்களுக்கு இருக்கிறது. இதுவரை சொல்லாத வார்த்தையை இப்போது ஏன் எடப்பாடி சொல்லுகின்றார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது , தூத்துகுடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரை குருவிகளை சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள்.
அப்போது நேரில் சென்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி பார்த்தாரா. அங்கு 100 நாள் நடந்த போராட்டத்திற்கு அமைச்சர்கள் யாராவது பேச்சுவார்த்தைக்குப் போனார்களா. இப்போது அதையும் இதையும் பேசிக்கொண்டு இருக்கின்றார். இவர் முதல்வராக இருந்தபோது தூத்துக்குடி சென்றிருக்க வேண்டும்.
ஜெயலலிதா தங்கும் கோடநாடு எஸ்டேட்டில் 2 கொலைகள் நடைபெற்றன. அந்த சம்பவம் காலையில் தான் தனக்கு தெரியும் என்கின்றார் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. இவர் எத்தனை முறை அம்மாவிடம் சென்று இருக்கின்றார். எடப்பாடி எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் நாட்டிற்கே தெரியும். அப்படி இருக்கையில் விஜயைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை.
தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்பட்டதா என்ற கேள்விக்கு, பொதுவாக அந்த முடிவுகளை தலைவர்தான் மேற்கொள்ள வேண்டும். இதில் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகவில் இருப்பவர்கள் பல பேர் பல கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்வதில்லை. அங்கு ஒவ்வொருவரும் ஒரு கருத்தை சொல்வார்கள். எங்களைப் பொருத்தவரை தலைவர் என்ன சொல்லுகிறாரோ அதன் அடிப்படையில் பயணம் மேற்கொண்டு இருக்கிறோம்.
எந்த கேள்வியாக இருந்தாலும் தெரிந்தவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்தாக இருக்கின்றதே தவிர, அதிமுகவில் தெர்மாகூலர் பல்வேறு கருத்துகளை சொல்வதை போல நாங்கள் சொல்ல முடியாது. விஜய் நாளைய முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications