அண்ணாமலை நேர்மையானவரா.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன.. செந்தில் பாலாஜி சம்பவம்
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவை தேர்தல் களத்தை தமிழ்நாடை உற்று நோக்கி கொண்டிருக்கிறது. அதிமுக எஸ்.பி. வேலுமணி, திமுக செந்தில் பாலாஜி இடையே கோவையை கைப்பற்றுவதில் மோதல் நிலவி வருகிறது. மறுபக்கம் பாஜக அண்ணாமலையும் செந்தில் பாலாஜியை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு செந்தில் பாலாஜி பழைய சம்பவங்களுடன் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செந்தில் பாலாஜி, "தங்க நகை பூங்கா, மேற்கு புறவழிச்சாலை, செம்மொழி பூங்கா, ஹாக்கி மைதானம், பெரியார் நூலகம் என கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளார். கோவை மாவட்டத்தில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை முதல்வரும் துணை முதல்வரும் கொடுத்துள்ளனர். தொழில் முனைவர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்துள்ளோம்.

அரவக்குறிச்சியில் நடந்தது என்ன
கோவையின் வளர்ச்சிக்கு தொழில்துறையினர் நன்றியை தெரிவித்துள்ளனர். வரக்கூடிய திமுக 2.O ஆட்சியில் செய்ய வேண்டிய திட்டங்கள் கோரிக்கைகளை எங்களிடம் கொடுத்துள்ளார்கள். கோவை தெற்கு தொகுதியில் உள்ள 11 வார்டுகளில் 6 வார்டுகளில் பரப்புரை செய்து முடித்துள்ளோம், செல்லும் இடங்களில் அடிப்படை வசதிகள் வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அண்ணாமலை என்ன நேர்மையான அரசியல்வாதியா. நானும் இதை ரொம்ப நாளாக கேட்டு கொண்டிருக்கிறேன். அவர் 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட போது வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தாரே. அதை கொடுத்தாரா.. இல்லையா.. என்பதை கேட்டு சொல்லுங்கள். வாக்காளருக்கு பணம் கொடுத்தாரா இல்லையா. நான் பேச வேண்டாமென இருந்தேன். நீங்கள் கேட்பதால் பதில் சொல்கிறேன்.
அண்ணாமலை நேர்மையானவரா
கரூரை சேர்ந்த 18 பேர் சுயேச்சையாக போட்டியிடுவது அவர்களின் விருப்பம். தேர்தல் களத்தைப் பொறுத்தவரை மக்களை சந்தித்து திமுகவின் சாதனை திட்டங்களை மேற்கோள்காட்டி வாக்குகள் சேகரித்து வருகிறோம். கரூரைச் சேர்ந்தவர்கள் யாராவது என்னுடன் இருக்கிறார்களா. அப்படி இருந்தால் அண்ணாமலையை வந்து ஒரு 10 பேரை காட்ட சொல்லுங்கள்.
அண்ணாமலை கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, இங்கிருந்த எல்லாரும் கோவைக்காரர்களா. அண்ணாமலையின் வார் ரூமில் வேலை பார்த்தவர்கள் கோயம்புத்தூர்காரர்களா. பேசுவது எல்லாம் நேரலை போட்டு விடுகிறார்கள் என்பதற்காக பேசுவதெல்லாம் உண்மையா. காங்கிரஸ் கட்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வேட்பாளர்கள் அறிமுகம் செய்தார்கள். நேற்று பரப்புரை தொடங்கியுள்ளார்கள்.
பாஜக திட்டங்கள் என்ன
காங்கிரஸ் கட்சியின் பரப்புரையில் எந்த தொய்வும் இல்லை. இன்னும் ஒரு சில நாட்களில் செயல்வீரர்கள் கூட்டம் போட போகிறோம். நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு ஆரம்பித்து விட்டோம். காங்கிரஸ் கட்சியினர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு வேட்பாளர்கள் அறிவித்த காரணத்தால் தற்போது அவர்கள் பணியை தொடங்கி உள்ளார்கள். கோவைக்கு பாஜக என்ன செய்தனர்.
பாஜகவினர் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது கோவைக்கு என்ன திட்டங்கள் செய்தார்கள் என்பதை சொல்ல சொல்லுங்கள். அப்படி சொல்லி அதற்காக வாக்குகள் கேட்டால் நியாயமானது. மெட்ரோ திட்டத்தை புறக்கணித்தவர்களா, கோவை வளர்ச்சியின் மீது என்ன அக்கறை செலுத்த போகிறார்கள். பாஜக அரசு அமைந்து எத்தனை வருடங்கள் ஆகிறது. கோவைக்கும், தமிழ்நாட்டிற்கும் அவர்கள் கொடுத்த திட்டங்கள் என்ன.
பட்டியலிட்ட செந்தில் பாலாஜி
அண்ணாமலை கொடுத்த பட்டியலில் என்ன திட்டங்கள் என்பதை சொல்லுங்கள். நான் சொல்வதைப் போன்று திட்டங்களை பட்டியலிட முடியுமா. கோவையில் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் யாராவது அடிக்கல் நாட்டியுள்ளார்களா. மெட்ரோ ரயிலுக்கு புள்ளிவிவரங்கள் தவறாக கொடுத்திருந்தால் கொடுத்த போது அதை சரி செய்து வாங்கியிருக்க வேண்டும். அனுப்பிய புள்ளி விவரங்களை பல நாட்களாக நிலுவையில் வைத்து விட்டு அதை நிராகரிப்பது சரியா.
மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு மெட்ரோ கொடுக்கப்பட்டுள்ளது. மதுரை, கோவை மக்களுக்கு ஏன் மெட்ரோவில் பயணம் செய்யக்கூடாதா. மெட்ரோவிற்கு மத்திய அரசு மட்டும் பணம் கொடுப்பதில்லை. மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து செலவு செய்யக்கூடிய திட்டம் தான். ஐந்து தேர்தலில் நின்றுள்ளேன் ஆறாவது தேர்தலில் இப்போது நிற்கிறேன். எதிர்க்கட்சி வேட்பாளர்களை விமர்சிக்க மாட்டேன்" என்றார்.












Click it and Unblock the Notifications