கோவை திமுகவின் கோட்டை.. 10 தொகுதியிலும் திமுகதான் வெற்றி பெறும் - அடித்துக் கூறிய செந்தில் பாலாஜி
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும், அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை கடந்த 4 ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் மீட்டுக் கொண்டிருக்கின்றார் என்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை, பீளமேடு பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு இன்று முதல்வரால் துவங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 11.58 லட்சம் குடும்பங்களையும் , குடும்பவாரியாக நேரில் சந்தித்து பா.ஜ.கவால் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை சொல்ல இருக்கின்றோம்.

மேலும், 4 ஆண்டுகளில் திமுக மக்களுக்கு செய்த சாதனைகளையும் , குறிப்பாக கோவை மக்களுக்கு வழங்கி இருக்கின்ற திட்டங்களையும் சொல்ல இருக்கின்றோம். ஜூலை 3 ம் தேதி 10 சட்டமன்ற தொகுதிகளிலும், 3,117 பூத்களிலும், பூத் வாரியாக இந்தப் பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். ஆளுமை மிக்க முதல்வராக தமிழக முதல்வர் இருக்கின்றார்.
பாஜக அரசின் துரோகங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல, நாளை மாலை கோவையில் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது. அதைத்தொடர்ந்து நாளை மறுதினம் 3,117 பூத்களில் பணிகளை முன்னெடுக்க இருக்கின்றோம். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரை கோவை மாவட்டத்தில் திமுக உறுப்பினராக இணைக்க இருக்கின்றோம்.
தமிழகத்தில் இளைஞர்கள் எங்களுடன்தான் இருக்கின்றனர். புதிய கட்சிகளுக்கு யாரும் செல்லவில்லை. துணை முதல்வர் யார் சென்றாலும் சந்திப்பார், அந்த வகையில்தான் தவெகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களை சந்தித்தார். ஓரணியில் தமிழ்நாடு என்பதில் கவனம் செலுத்த இருக்கின்றோம். 2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.
மொழிப்பிரச்சினை, இந்தி திணிப்பு இல்லை என்று சொல்ல முடியுமா?. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று அப்போதைய முதல்வர் சொன்னார். இப்போதைய அரசால் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றது. யாருக்காவது சமையல் கேஸ் மானியம் இப்போது வருகின்றதா?. தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்காக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட இருக்கின்றது.
4 ஆண்டுகளில் என்ன மாநில உரிமை பறிபோனது என அதிமுகவினரிடம் கேளுங்கள். கோவையை பொருத்தவரை பெரியார் நூலகம் மாணவர்களுக்கு எந்தளவு பயனுள்ளதாக இருக்கும். தங்க நகை தொழிற்பேட்டை, நீண்ட கால கோரிக்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார்.
2026 இல் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னவர்கள்தான், பா.ஜ.கவுடன் அமைதியாக உட்கார்ந்து இருக்கின்றனர். டேபிளில் மிக்சர் வைத்திருந்தால் அதை சாப்பிட்டு கொண்டு இருந்திருப்பார்கள். பா.ஜ.கவுடன் சேரமாட்டோம் என்று சொன்னவர்கள் இப்போது சேர்ந்து இருக்கின்றனர். பா.ஜ.கவை எதிர்த்து அரசியல் பண்ண வேண்டிய நிலை இல்லை.
கோவையில் 1,364 கிலோ மீட்டர் தூரம் ரூ. 417 கோடிக்கு சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றது. தேர்தல் நேரத்தில் என்ன செயல்திட்டத்தை வைத்திருக்கின்றோம் என்பதை உங்களிடம் எப்படி சொல்லி விட முடியும். தேர்தல் களப் பணியை நாங்கள் எப்போதோ துவங்கிவிட்டோம். திமுக பகுதி நிர்வாகிகள் தேர்வில் எந்த சிக்கலும் இல்லை. கோவை மாவட்டம் திமுகவின் கோட்டை, திமுகதான் இங்கு வெற்றி பெறும் என்றார்.












Click it and Unblock the Notifications