களையெடுக்கும் திமுக தலைமை..செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் கோவை.. முக்கிய புள்ளியின் பதவி பறிப்பு!
கோவை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக கட்சிப் பணிகளில் அலட்சியம் காட்டி வந்ததால் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்கு பின் செந்தில் பாலாஜி இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருப்பதால், திமுக தலைமை தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வரும் சூழலில், திமுக தலைமை கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறது.

அதேபோல் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் ஒவ்வொரு பூத்திலும் சுமார் 40 சதவிகித வாக்காளர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று திமுக தலைமை உத்தரவிட்டது. முதலில் இந்த இலக்கு 30 சதவிகிதமாக இருந்த நிலையில், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 40 சதவிகித வாக்காளர்களை கட்சிக்குள் கொண்டு வந்து ஆச்சரியம் கொடுத்தார்.
இதனால் மற்ற நிர்வாகிகளுக்கும் அதே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் கோவை மாவட்ட பொறுப்பையும் செந்தில் பாலாஜியே கவனித்து வருகிறார். அண்மையில் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் செந்தில் பாலாஜி முதல்வர் ஸ்டாலின் பாராட்டியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஏனென்றால் சட்டசபைத் தேர்தலில் கோவையில் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.
ஆனால் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கொடி நாட்டியது. இதற்கு செந்தில் பாலாஜி முக்கியக் காரணமாக இருந்து வந்தார். தற்போது சட்டசபைத் தேர்தல் பொறுப்பும் செந்தில் பாலாஜி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை திமுக நிர்வாகிகள் இடையில் செந்தில் பாலாஜி மீது அதிருப்தி இருந்து வந்தது.
செந்தில் பாலாஜிக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவம் இதற்கு காரணமாக கூறப்பட்டது. இந்த சூழலில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் தனது கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில் பாலாஜி பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தாமல் இருந்து வந்தார். செந்தில் பாலாஜி சிறையில் இருந்த போதும் கூட, அவரின் புகைப்படங்கள் இல்லாமல் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் கோவையில் நடக்கவில்லை.
இதனால் கார்த்திக்கின் செயல்பாடுகள் செந்தில் பாலாஜியுடன் மோதல் போக்கை உருவாக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக்கை, அந்தப் பொறுப்பில் இருந்து திமுக தலைமை நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த பொறுப்புக்கு செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான துரை செந்தமிழ்ச் செல்வன் கொண்டு வரப்பட்டுள்ளார்.
கார்த்திக் நீக்கப்பட்டதற்கு அவர் கட்சிப் பணிகள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. ஓரணியில் தமிழ்நாடு விவகாரத்தில் கூட கார்த்திக் அலட்சியம் காட்டியதாகவும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் வார்னிங் கொடுத்தும் அவர் பணிகளில் ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் செந்தில் பாலாஜியின் பரிந்துரையின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications