கோவையில் முதல் சம்பவம்! ஸ்கூட்டரில் வந்து நகை பறித்த தில்லாலங்கடி லேடிகள்! போலீசார் சொன்ன ஷாக் தகவல்
கோவை: கோவை அருகே நடைப்பயிற்சி சென்ற பெண்ணிடம் ஸ்கூட்டரில் வந்த இரண்டு தில்லாலங்கடி பெண்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகைப்பறிக்க முயன்றனர். இதில் கையும் களவுமாக சிக்கிய பெண்களுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இந்த நிலையில் இந்த தில்லாலங்கடி பெண்கள் பற்றி போலீசார் திடுக் தகவலை தெரிவித்துள்ளனர்.
கோவையில் நடைபயிற்சிக்கு சென்ற நடுத்தர வயது ஆணிடம் பைக்கில் வந்த இரண்டு பெண்கள் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நகை பறிப்பில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அடிக்கடி ஈடுபடும் சம்பங்கள் நடைபெறும் நிலையில், இரண்டு பெண்கள் நகை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

திருடி திருடி என கத்திய கீதாமணி
கோவை பீளமேடு அருகே உள்ள எல்லைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 57 வயதான இவர் அங்குள்ள பிஎன் பாளையத்தில் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கீதாமணி (54). கீதாமணி வளர்ப்பு நாயுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். இப்படித்தான் சம்பவம் நடந்த அன்று கீதாமணி வாக்கிங் சென்றுள்ளார்.
அப்போது அவரை நோக்கி ஸ்கூட்டரில் இரண்டு பெண்கள் வந்தார்கள். கீதாமணி அருகே வந்த பெண்கள், முகவரி கேட்டு இருக்கிறார்கள். பெண்கள் என்பதால் கீதாமணியும் எந்த அச்சமும் இன்றி அவர்களுக்கு வழி சொல்லியிருக்கிறார். அப்போது ஸ்கூட்டரில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று கீதாமணியின் கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்க சங்கிலியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறிக்க முயற்சித்தார். இதை சற்றும் எதிர்பாராத கீதாமணி, நகையை ஒரு கையால் பிடித்தபடி திருடி, திருடி என கத்தி கூச்சல் போட்டார்.
தர்ம அடி கொடுத்த மக்கள்
மனைவியின் அலறல் சத்தம் கேட்ட செல்வராஜ், என்னமோ ஏதோ என்று வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது தனது மனைவி கீதாமணியிடம் பெண் ஒருவர் நகை பறிப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்து அவரும் கூச்சலிட்டார். இந்த சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஓடிவந்தனர். இதற்குள் இனி தப்பித்தால் போதும் என இரண்டு பெண்களும் ஸ்கூட்டரில் தப்பி செல்ல முயன்றனர். ஆனால், அந்த 2 பெண்களையும் மடக்கிய அப்பகுதி மக்கள், அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
திடுக்கிடும் தகவல்
மேலும் கோவை பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இருவரையும் பிடித்து சென்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. நகை பறிக்க முயற்சித்த இரு பெண்களும் திருமணம் ஆனவர்கள் என்பதும், திருப்பூர் மாவட்டம் காரனம்பேட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி கிருஷ்ணவேனி (வயது 37), சங்கோதிபாளையம் பாபுவின் மனைவி அபிராமி (26) என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி கோவை அருகே உள்ள தொப்பம்பட்டி குருடம் பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன் மனைவி லட்சுமி (64) என்பவரிடம் முகவரி கேட்பது போல நடித்து 5.5 பவுன் நகையை பறித்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். நகை பறிப்பு வழக்கில் பெண்கள் கைது செய்யப்பட்டது குறித்து போலீசார் கூறுகையில், "கோவையில் பெண்கள் நகை பறிப்பில் கைதான சம்பவம் முதல் முறையாக நடைபெற்றுள்ளது. அவர்கள் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டினார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம்" என்றனர்.


Click it and Unblock the Notifications
