இறுதிக்கட்டத்தை எட்டும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. டிடிவி தினகரன் நண்பரிடம் விசாரணை!
கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நாமக்கல் வழக்கறிஞர் செந்திலிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வு எடுக்கும் கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.

தொடரும் விசாரணை
இதனைத்தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகரின் மேற்பார்வையின் கீழ் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, ஜெயலலிதா கார் ஓட்டுநர் குணசேகரன் மற்றும் தொழிலதிபர் செந்தில் குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உதகை நீதிமன்றம்
இதனிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்திற்கு வந்தபோது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக காவல்துறை மற்றும் தடயவியல் துறையை விசாரணை செய்ய போவதாக தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல் வழக்கறிஞர்
இதனிடையே அதிமுக நிர்வாகிகள் சிலருக்கும் தனிப்படை போலீசார் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியரான மருது அழகுராஜிடம் விசாரணை செய்யப்பட்டது. இந்த நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு நெருக்கமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிகர் செந்திலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கறிஞர் செந்தில் யார்?
இவர் சசிகலா தரப்பில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராகி வாதாடியுள்ளார். அதேபோல் சசிகலா தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டின் போது, செந்தில் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு நெருக்கமானவர்களிடம் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக விசாரணை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications