468 ஏக்கர் நிலம் விடுவிப்பு.. கோவையில் பட்டா உட்பிரிவு..தமிழக அரசின் மாஸ்.. கோயம்புத்தூருக்கு ஹேப்பி
கோவை: நில எடுப்பு நடவடிக்கைகளிலிருந்து விலக்களித்து, நில உரிமையாளர்களுக்கே மீண்டும் நிலத்தை வழங்குவதற்கான விடுவிப்பு உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.. இதுகுறித்து தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டத்தின், 39பி பிரிவு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தனியாரின் சொத்துக்களை கையகப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. இந்த உரிமையை, சட்டப்பிரிவு 31சி பாதுகாக்கிறது.

இந்தியா முழுதும் இந்த சட்டத்தை பயன்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் தனியார் நிலங்களை கையகப்படுத்துகின்றன. அதற்காக இழப்பீடுகளையும் வழங்குகின்றன. எனினும், இழப்பீடுகள் நியாயமாக இல்லை என்றுகூறி, நில உரிமையாளர்கள் போராடுவது அடிக்கடி நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
இழப்பீடுகள்: அதேபோல, எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், நிலத்தை விட்டுக்கொடுக்க பலருக்கு மனம் வருவதில்லை என்றும், என்ன நோக்கத்துக்காக நிலம் எடுப்பதாக அரசு சொல்கிறதோ, அந்த நோக்கத்துக்கு மாறாக நிலம் பயன்படுத்தப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் வலம்வருவதும் இயல்பாகிவிட்டது. அந்தவகையில், நிலம் கையகப்படுத்துவது, இழப்பீடுகளை வழங்குவது உள்ளிட்ட விவரங்களை முன்னிறுத்தி ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து கொண்டும் இருக்கின்றன.
"பொதுநலனுக்காகவே இருந்தாலும், அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது" என்று நேற்றைய தினமும் சுப்ரீம் கோர்ட் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
நில எடுப்பு: இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை கையகப்படுத்தப்பட்ட நிலம் விடுவிக்கப்பட்டு, உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டும் வருகின்றது. பல ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கொண்ட நில எடுப்பு நடவடிக்கைகளிலிருந்து விலக்களித்து, நில உரிமையாளர்களுக்கே மீண்டும் நிலத்தை வழங்குவதற்கான விடுவிப்பு உத்தரவுகளை, கோவையில் முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார்.
கோவை, பீளமேட்டில் நடந்த விழாவில், நில எடுப்பு நடவடிக்கையில் விலக்களிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்கு, தனிப்பட்டா பெறுவதற்கான தடையின்மை சான்று மற்றும் அரசு உத்தரவை பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அந்தவகையில், வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த, மொத்தம் 468 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டு, அந்தந்த நில உரிமையாளர்களுக்கு அவை வழங்கப்பட்டது.
நிலம் விடுவிப்பு: அப்போது தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி பேசும்போது, "கோவை மாவட்டத்தில் தமிழக வீட்டுவசதி வாரியம் 1981 முதல் 1995 வரை பல்வேறு கால கட்டங்களில், நிலங்களை விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தியது. வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டபடி திட்டங்களை மேற்கொள்ளவில்லை. கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகையையும் வழங்கவில்லை.
இந்த சூழலில் நில உரிமையாளர்கள் நிலங்களை பிரித்து, லே அவுட்டுகளாகவும், வீட்டு மனைகளாகவும் விற்பனை செய்தனர். ஆனால், பட்டாக்களில் பெயர் மாற்றமோ, உட்பிரிவோ செய்ய முடியாமல், பலரும் வங்கிக்கடன் பெற முடியாத நிலைமை ஏற்பட்டது.
பட்டா உட்பிரிவு: இந்த நேரத்தில்தான், தமிழக அரசு இந்த விஷயத்தில் முனைப்பு காட்டி, இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி, நிலத்தை விலை கொடுத்து வாங்கிய பயனாளிகளுக்கு பட்டா வழங்கி, உட்பிரிவு செய்து கொடுப்பதோடு, தமிழக வீட்டுவசதித்துறையால் தடையின்மை சான்றையும் வழங்கியுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications