“அமித் ஷா சொன்ன ஐடியாவை கேட்காததன் பலனை அனுபவித்து வருகிறார் எடப்பாடி”.. ஓபிஎஸ் சொன்ன மேட்டர்!
கோவை: "அமித்ஷா சொன்ன வியூகங்களை ஏற்காததன் விளைவுகளைத்
தான் தற்போது எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருகிறார்" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூறியுள்ளார்.
மேலும், ஆர்பி உதயகுமாருக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை, அவரை மக்களே பார்த்து கொள்வார்கள் என்றும், எதையும் எதிர்பார்க்காமல், கட்சிக்காக உழைக்க கூடிய உன்னதத் தொண்டன் தான் செங்கோட்டையன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அதிமுக ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என 2021ல் அமித்ஷா சொன்ன வியூகங்களை ஏற்காததன் விளைவுகளைத் தான் தற்போது எடப்பாடி பழனிசாமி அனுபவித்து வருகிறார். கட்சி ஒன்றிணைந்தால்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்பதை அதிமுக தொண்டர்கள் அனைவருமே உணரத் தொடங்கியுள்ளனர்.
கட்சியின் உண்மையான தொண்டர்கள் எங்கள் பின்னால்தான் இருக்கிறார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவை ஒருங்கிணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ரகசியம். ஒருசில ரகசியங்களை வெளியிட முடியாது, அது அதிமுக இணைப்புக்கு தடையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் பேச்சு குறித்துப் பேசிய ஓபிஎஸ், "எம்ஜிஆர் காலத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் அதிமுகவுக்கு உழைக்கும் உன்னதத் தொண்டன்தான் செங்கோட்டையன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றுதான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் விரும்புகின்றனர்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கருத்து பற்றி பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவர் பேசும் மொழி சரியில்லை. அவர் பேசுவதை பேசட்டும். மக்கள் பார்த்துக்கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து, "தனது கடைசிகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. அப்போது, ஓபிஎஸ் மீது வைத்திருந்த அபிமானத்தை பற்றி என்னிடம் ஜெயலலிதா பகிர்ந்து கொண்டார். அதை நான் வெளியே சொன்னால், அரசியல் நாகரிகமாக இருக்காது. எனக்கு எச்சரிக்கை விடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை." என்று பேசியது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் அத்திக்கடவு - அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்காமல் அதிருப்தி தெரிவித்தது, அதிமுக மட்டுமன்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய செங்கோடையன், "எம்.ஜி.ஆர் படமும் ஜெயலலிதா படமும் இல்லை என்பதால் தான் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் அதுபற்றி கவலைப்படாமல் இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள்" என்று பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications