கோவையில் ஆளுநருக்கு கருப்பு கொடி! போராட்டத்தை திடீரென ரத்து செய்த அமைப்புகள்! என்ன காரணம் தெரியுமா?
கோவை : கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நாளை முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவல்துறை அனுமதி மறுத்த காரணத்தால் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை நாளை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பயணம் மேற்கொள்ளவுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் அவர் அங்கிருந்து சாலை மார்க்கமாக உதகைக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது கடந்த வாரங்களில் அதிகமாகவே இருந்ததை பல தருணங்களில் காண முடிந்தது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய 19 மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துவது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநருக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கருப்பு கொடி காட்டப்பட்ட நிலையில், அவரது பாதுகாப்பு வாகனம் மீது கருப்பு கொடிகள் வீசப்பட்டதாக சர்ச்சை வெடித்த நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆளுநர் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள், கட்சிகள் கூறியுள்ளன.

கருப்பு கொடி போராட்டம்
இந்நிலையில் கோவைக்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.கோவை மாவட்டம் காந்திபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக மக்கள் நலனுக்காக தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 19 மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார்.

மெத்தனப் போக்குக்கு கண்டனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த மெத்தனப் போக்கை கண்டிக்கும் வகையில் உதகை செல்வதற்காக நாளை ஆளுநர் கோவை விமான நிலையம் வரும் போது, தமிழக மக்களின் உணர்வுகளை காட்டும் வகையில் விமான நிலையம் அருகே அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

போராட்டம் ரத்து
இதற்கிடையில் கோவை வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான போராட்டத்திற்கு கோவை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் ஆளுநர் ஆர்.எ. ரவியின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கோவை காவல்துறையினர் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த கருப்புக்கொடி போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறையினரின் இந்த அறிவிப்பு காரணமாக போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications