கோவை மெட்ரோ ரயில் திட்டம்.. களத்தில் இறங்கிய திட்டக் குழுவினர்.. ஜெட் வேகத்தில் பணிகள்
கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கோவை மெட்ரோ ரயில் முதற்கட்ட திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மெட்ரோ ரயில் திட்ட ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோயம்பத்தூர் மாநகரில் கோவை, சத்தியமங்கலம் சாலையில் கணபதி டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை மெட்ரோ ரயில் சேவை பயண பாதை திட்டமிடல் தொடர்பாக மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் 34.8 கிலோ மீட்டர் தொலைவில் அவிநாசி சாலை, சத்தி சாலை என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமையப் போகிறது. உக்கடத்தில் தொடங்கி நீலாம்பூா் வரை மற்றும் கோவை ரயில் நிலையத்தில் தொடங்கி, சத்தி சாலை வழியம்பாளையம் பிரிவு வரை என இந்த இரண்டு வழித்தடங்களில் திட்டம் அமைக்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 32 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன. 10 ஆயிரத்து 740 கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயில் திட்டப பணிகள் தொடங்கப்பட உள்ளன. கோவை நகரின் முக்கியப் பகுதிகளான ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய முக்கிய பொது போக்குவரத்து பகுதிகளை இணைக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், எதிர்காலத்தில் மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது
கோயம்புத்தூர் மாநகரில் கோவை சத்தியமங்கலம் சாலையில் கணபதி டெக்ஸ்டூல் முதல் சரவணம்பட்டி வரை மெட்ரோ ரயில் சேவை பயண பாதை திட்டமிடல் தொடர்பாக, டெக்ஸ்டூல் பாலம் அருகில் கணபதி பேருந்து நிறுத்தம், கணபதி சி.எம்.எஸ்.பள்ளி அருகில் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், எதிர்கான பயணத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் திட்டம் மொத்தம் 34.8 கி.மீ நீளத்தை உள்ளடக்கியது, இதன் மூலதனச் செலவ ரூ.10,740 கோடி, கோயம்புத்தூர் மெட்ரோ இரயில் முதற்கட்டம் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மெட்ரோ திட்டத்தின் நடைமுறைகளை விரைவாக முடிப்பதற்கும், திட்டத்தை செயல்படுத்தும் கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை குறைப்பதற்கும், நிலம் கையகப்படுத்தும் திட்டங்களைத் தயாரித்தல், பயன்பாட்டு மாற்றுத் திட்டங்கள், மேம்பாலத்துடன் ஒருங்கிணைப்பு. ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையங்களாக (Multi Modal Integration) இரயில் நிலையங்களின் இணைப்பு போன்ற ஆரம்ப பணிகளைத் தொடங்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 27ஆம் தேதி அன்று சென்னையில், மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சித்திக் மற்றும் மெட்ரோ ரயில் தலைமை பொது மேலாளர் ஆகியோரை கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கோயம்பத்தூர் மாநகராட்சி ஆணையாளர், ஆகியோர் நேரில் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் மெட்ரோ ரயில் திட்டத்தினை செயல்படுத்துதல், அதன் காலக்கெடு மற்றும் அதன் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துதல் மற்றும் கணபதி டெக்ஸ்டூல் பகுதியில் அமையவுள்ள மேம்பாலம் ஆகியவற்றிற்கான பணிகள் மேற்கொள்ளும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், மெட்ரோ ரயில் சேவை துறை, நெடுஞ்சாலைத் துறை, மாநகராட்சி ஆகிய துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வது குறித்து டெக்ஸ்டூல் பாலம் அருகில் கணபதி பேருந்து நிறுத்தம், கணபதி சி.எம்.எஸ்.பள்ளி அருகில் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ப.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மெட்ரோ திட்ட இணை பொது மேலாளர் நாகேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், சத்தியமங்கலம் சாலையில் நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஆகிய இரண்டிற்கும் நிலம் கையகப்படுத்தும் பணியை முடிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். 3 கி.மீ.க்கு நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.56 கோடி அனுமதி கிடைத்துள்ளது. இதில், டெக்ஸ்டூல் பிரிட்ஜ் முதல் சூர்யா மருத்துவமனை வரை 1 கி.மீ.க்கு 20 மீட்டர் நிலம் கையகப்படுத்தப்படும்.
மெட்ரோ திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதலுக்கு கால அவகாசம் தேவை. எனவே, அவசரம் கருதி 1 கி.மீ.க்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு முன்னுரிமை அளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications