பீப் பிரியாணி கடை.. பரபரப்பான கோவை! களத்தில் இறங்கிய பா.ரஞ்சித்தின் நீலம்! கமிஷனருக்கு பறந்த மனு!
கோவை: கோவை உடையாம்பாளையத்தில் தள்ளு வண்டி பீப் பிரியாணி கடையை அகற்ற வேண்டும் என மிரட்டியதாக பாஜக பிரமுகர் சுப்பிரமணி என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மீது வழக்கு பதிவுச் செய்துள்ள காவல்துறை, அவரை விரைந்து கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மாநகராட்சி காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை உடையாம்பாளையம் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த ரவி அபிதா தம்பதியினர் தள்ளுவண்டி கடை நடத்தி வருகின்றனர். மூன்று சந்திப்பு பகுதியில் அவர்கள் கடையில் பீஃப் பிரியாணி விற்பனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக பிரமுகரான சுப்ரமணி என்பவர் அங்கு பீப் பிரியாணி உள்ளிட்ட அவற்றை விற்பனை செய்யக்கூடாது எனவும், கடையை காலி செய்ய வேண்டும் என மிரட்டி இருக்கிறார். மேலும் ஊர் கட்டுப்பாடு காரணமாக பீப் விற்கக் கூடாது, வேண்டுமானால் சைவ உணவு விற்பனை செய்யுங்கள் என மிரட்டி இருக்கிறார்.
கோவை பீப் பிரியாணி கடை:
கடந்த சில நாட்களுக்கு முன்பே சுப்பிரமணி கடையை காலி செய்ய வேண்டும் என அபிதா - ரவி தம்பதியினரை மிரட்டிய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கடைக்கு வந்து கடையை காலி செய்ய வேண்டும் என மிரட்டி இருக்கிறார். இதனால் கடையில் சாப்பிட்டவர்கள் அச்சமடைந்த நிலையில் கடையை உடைத்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
பாஜக பிரமுகர் மிரட்டல்:
இதை அடுத்து அதனை வீடியோவாக எடுத்த அபிதா சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இது தொடர்பாக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டது. பக்கத்தில் உள்ள கடைகளில் சிக்கன் ரைஸ், மீன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் மாட்டிறைச்சி விற்பனைக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என அபிதா கேள்வி எழுப்பி இருந்தார்.
மக்கள் எதிர்ப்பு:
இந்த நிலையில் தள்ளுவண்டி கடை பெண் உரிமையாளரை மிரட்டியது பாஜக ஓபிசி அணியின் மாநகர் மாவட்ட செயலாளரான சுப்பிரமணி என்பதும், பீப் பிரியாணி கடை போடக் கூடாது என ஊர் கட்டுப்பாடு இருக்கிறது. கோவில் அருகே பீப் கடை போடக் கூடாது, சைவ சாப்பாடு விற்பனை செய்வதால் எந்த பிரச்சனையும் இல்லை என கூறியிருந்தார்.
மக்கள் மறியல்:
இந்த நிலையில் பாஜக நிர்வாகி சுப்பிரமணி மீது துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் அவர் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு மாட்டிறைச்சி உண்ணும் நிகழ்ச்சி நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்திருக்கிறது.
நீலம் பண்பாட்டு மையம்:
இந்த நிலையில் உடையாம்பாளையத்தில் தள்ளுவண்டி பீப் பிரியாணி கடையை அகற்றக் கோரி மிரட்டிய சுப்பிரமணியை கைது செய்ய வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் கோவை நிர்வாகிகள் மாநகராட்சி காவல் ஆணையரை சந்தித்து சுப்பிரமணி மீது வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications