”இந்து பண்டிகைகளை ஒதுக்குகிறார்” முதல்வர் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை.. வானதி சீனிவாசன் கேள்வி!
கோவை: இந்துகள் கொண்டாடும் பண்டிகைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்குவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை காந்திபுரம் 48வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வானதி சீனிவாசன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம். குழந்தைகளின் அடிப்படை கல்வி மற்றும் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி பள்ளிகள் மிகமுக்கியமானது. இதனால் தான் அங்கன்வாடிகள் மீது அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

வானதி சீனவாசன் பேட்டி
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெற்கு தொகுதிக்குட்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை அளிக்க உள்ளேன். அதில் குறிப்பாக மழைநீர் தேக்கம் முக்கியக் கோரிக்கையாக இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு முன் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், மாற்று இடங்கள் ஆகியவை வழங்கியதற்கு பின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.

விநாயகர் சதுர்த்தி
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்தி முதல்வர் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பேசிய அவர், அனைத்து மத விழாக்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கக் கூடிய பொதுவான முதலமைச்சர் என்பதை அவர் எங்கேயும் தெரிவிக்கவில்லை. சிறுபான்மை மக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அவர், இந்துகள் கொண்டாடும் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளை ஒதுக்குகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
இதில் இருக்கக்கூடிய அரசியல் என்ன என்பதை தெளிவுபடுத்தும் பொறுப்பு முதலமைச்சருக்கு இருக்கிறது. கட்சியின் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துகளை கூறவில்லை என்றாலும் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும். இதனை நாங்கள் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் தமிழக முதலமைச்சர் மீண்டும் மீண்டும் இந்த தவறை செய்துகொண்டே இருக்கிறார்.

பாஜகவில் திமுகவினர்
மேலும், பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பாஜகவினர் திமுகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல திமுகவிலிருந்து பலரும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள். மாற்றுக்கட்சியினர் இணைவதால் திமுகவின் பலம் அதிகரிக்கிறது என்றால், எங்களின் பலமும் கூடுவதாகவே அர்த்தம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications