GST 2.0-க்குப் பிறகு அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் - நிர்மலா சீதாராமன்
கோவை: ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்கு பிறகு செப்டம்பர் 22 நவராத்திரி முதல் அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அனைத்து மாநில நிதியமைச்சர்களின் பங்களிப்பில்லாமல் ஜிஎஸ்டி வரி குறைப்பு சாத்தியமில்லை என்று கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பாராட்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் மூலம் வரி குறைப்பு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா கோவை, நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கான பாராட்டு பிரதமருக்கானது. கொரோனா காலகட்டத்தில் கூட எந்த வரியையும் உயர்த்த பிரதமர் அனுமதிக்கவில்லை. வியாபாரிகள் குறித்து தனது குடும்ப உறுப்பினர்போல் பேசக் கூடியவர் பிரதமர். வருமான வரி உச்சவரம்பு குறித்து அதிகாரிகள் உட்பட பலரும் பல்வேறு கருத்துகள் கூறிய சூழலில் அனைவரது கருத்தையும் கேட்டு 12 லட்சம் ரூபாய் வருமான வரி உச்சவரம்பு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
1961-க்குப் பிறகு வருமான வரி விதிப்பில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்று பிரதமர் கூறியதற்கு இணங்க தற்போது மாற்றப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளது. தற்போது ஜிஎஸ்டியில் 5 மற்றும் 18 சதவீதம் பட்டியலில் உள்ள எந்த ஒன்றும், 40 சதவீதம் ஜிஎஸ்டி பட்டியலுக்குச் செல்லாது. அனைத்து மாநில நிதி அமைச்சர்களின் பங்களிப்பில்லாமல் ஜிஎஸ்டி குறைப்பு என்பது சாத்தியமில்லை.
இதேபோல, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பிற்கு பிறகு செப்டம்பர் 22 நவராத்திரி முதல் அக்டோபர் மாதம் வரை 67.7 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது. ஈ காமர்ஸ் மூலம் நடைபெறும் வர்த்தகம் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. மாருதி நிறுவனத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஹூண்டாய் நிறுவனத்தில் ஒரே நாளில் 11 ஆயிரம் டீலர் முன்பதிவு செய்தனர்.
ஆட்டோமொபைல் துறையில் வர்த்தகம் சிறப்பாக இருப்பதாக உள்ளது. இதேபோல, இன்சூரன்ஸ் துறையிலும் நல்ல மாறுதல் ஏற்பட்டுள்ளது. ஏசி, டிவி போன்றவற்றின் விற்பனையும் உயர்ந்துள்ளது. மேலும் இதனை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த பாராட்டு விழாவில் வியாபாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் குறிப்பிட்ட அனைத்தையும் பிரதமரிடம் எடுத்துச் சொல்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications