டிடிவி தினகரன் தவெகவுக்கு வர விரும்பினார்.. டெல்லியின் அழுத்தம் தான்.. போட்டுடைத்த செங்கோட்டையன்
கோவை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க விரும்பினார். சூழல் காரணமாக வரவில்லை. கூட்டணி பற்றி யாராவது பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, பொதுவாக பல்முனை தாக்குதல் என்பது ஒருவர் மாபெரும் வெற்றியை அடையப் போகிறார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இதற்கு முன்னாள் எல்லோரும் கூட்டணியில் இணைவார் என நினைத்தார்கள். நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் பெரிய கட்சியின் கொடி பறக்குது, பிள்ளையார் சுழி போடப்பட்டது என சொன்னது எல்லாம் அவர்கள்தான். இன்று நிலைமை மாறும் பொழுது ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்கின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள், ஐடி விங் ஆகியோர் எங்கே தாக்குதல் நடத்த வேண்டும் என்றால் திமுக மீது குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதை சொல்லாமல் திமுகவிற்கு பி டீமாக அதிமுக இருக்கிறது. புதிதாக உருவான கட்சி மீது குற்றச்சாட்டு சொல்வது என்பது எதிர்க்கட்சி நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று. இங்கேதான் ஒவ்வொருவரும் கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது வேதனை அளிக்க கூடிய ஒன்று.
எம்ஜிஆர் , ஜெயலலிதாவுடன் பயணம் செய்தவன் நான். என் மீது ஊழல் குற்றசாட்டு என யாராவது சொன்னால், உச்சநீதிமன்றம் வரை அதற்கான தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கில் எந்த குற்றமும் செய்யவில்லை என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பில் இந்த வழக்கின் மூலமாக அரசியல் பயணத்தை மேற்கொள்ளாத சூழல் ஏற்பட்டிருக்கிறது என சொல்லி இருக்கின்றனர்.
இன்று என்னைப் பற்றி சொல்வதற்கு எந்த நிலையும் இல்லை. என்ன குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி இருக்கிறது என சொல்ல வேண்டும். இப்படி யாராவது அது போன்ற கருத்துக்கள் சொல்வார்கள் என்றால் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். டிடிவி தினகரன் வரவில்லை என்பது ஏமாற்றம் இல்லை . டிடிவி தினகரன் தவெக கூட்டணிக்கு வர நினைத்தார். கூட்டணி பற்றி யாராவது பேசினாலே டெல்லியில் இருந்து வந்துவிடுகிறார்கள். சூழ்நிலை காரணமாக டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார். எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்.
ராமதாஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக செய்தியில் பார்த்தேன். நல்லது நடக்கட்டும். எம்ஜிஆர் வந்தபோது கூட 100 நாட்கள் கூட படம் ஓடாது என்று கூறினர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பொழுது கூட அவர் வெற்றி பெற்றார்.
அதிமுக அண்ணாவை மறந்துவிட்டது என்று விஜய் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, திமுக, அதிமுக என இருவரும் அண்ணாவை மறந்து விட்டார்கள்.
அதனால் தான் நான் வெளியில் வந்தேன். ஜெயலலிதா, அண்ணா படங்களை வைக்காமல் தான் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். யாரால் நாம் வளர்க்கப்பட்டோம் என்பதை மறந்து விடக்கூடாது. தவெக இயக்கத்தில் ஜனநாயகம் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications