இந்து முன்னணி நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ்.. கொள்கை எதிரியுடன் உறவா? தவெகவினர் அதிர்ச்சி!
கோவை: இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அமைச்சர் விக்னேஷ் தலைமை தாங்குவது தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவை கொள்கை எதிரி என்று தவெக கூறி வரும் சூழலில், தற்போது பாஜகவின் ஆதரவு இயக்கமான இந்து முன்னணி நடத்தும் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவது விவாதமாகி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி இருக்கிறது. குறிப்பாக பாஜக வலிமையுடன் இருக்கும் கொங்கு மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக ஆதரவு இயக்கமாக இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களில் தீவிரமாக இயங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்து முன்னணி நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அமைச்சர் விக்னேஷ் தலைமை தாங்குவது விவாதமாகி இருக்கிறது.
குறிச்சி நகர இந்து முன்னணி சார்பாக நடத்தப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான அழைப்பில் அமைச்சர் விக்னேஷ் பெயர் இடம்பெற்றிருக்கிறது. செப்டம்பர் 14ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விக்னேஷ் கலந்து கொள்ள இருக்கிறார். இது தவெக ஆதரவாளர்கள் மத்தியில் விவாதமாக மாறி இருக்கிறது.
ஏனென்றால் தவெகவின் முதல் மாநாட்டிலேயே விஜய், பாஜக தான் தங்களின் கொள்கை எதிரி என்று அறிவித்தார். அதன்பின் பாஜகவை பெரிதாக விமர்சிக்கவில்லை. ஆட்சிக்கு வந்த பின்னரும் கூட பாஜகவை விமர்சிக்க விஜய் தயக்கம் காட்டி வருகிறார். மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக இணக்கமாக செயல்படுவோம் என்று அறிவித்தார்.
ஆனால் தற்போது இந்து முன்னணி அமைப்பு நடத்தும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் தவெக அமைச்சர்கள் பங்கேற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக ஆட்சிக்கு வருவதற்கு சிறுபான்மை மக்கள் கணிசமான ஆதரவை அளித்திருந்தனர். இந்த நிகழ்வு காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக தவெக கொள்கைப் பாதை தடம் மாறுகிறதோ என்ற கேள்வி எழுகிறது.
பழனியில் நடந்த முருகன் மாநாட்டில் அப்போதைய அமைச்சர் சேகர்பாபுவுக்கு அருகில் அர்ஜுன் சம்பத்திற்கு இடம் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவே மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி விமர்சனத்தை பெற்றது. தற்போது சாதாரண விநாயகர் சதுர்த்தி விழாவிற்கே அமைச்சர் விக்னேஷ் தலைமை தாங்குவது தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் விவாதமாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications
