விஜய்யை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. செங்கோட்டையன் நேரடி அட்டாக்!
கோவை: அதிமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால், தினமும் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு வருவதாகத தவெக நிர்வாகி செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய்யை பார்த்து எல்லோருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது என்று கூறிய செங்கோட்டையன், வெற்றி என்ற இலக்கை விஜய் எட்டப் போவதால் தான் விமர்சிக்க தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை ஊழல்வாத அடிமை கட்சி என்று தவெக தலைவர் விஜய் சீண்டினார். அதேபோல் அதிமுக கூட்டணிக்கு பாஜகவே தலைமை என்றும் விஜய் விமர்சித்திருந்தார். இதனால் அதிமுகவினர் கொந்தளித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்க்கு ஒன்றும் தெரியவில்லை.. யாருடன் யார் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். யார் தலைமை தாங்குகிறார்கள் என்று தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி பதிலடி
முதலில் விஜய்யை ஒரு பிரஸ்மீட்டை கொடுக்க சொல்லுங்கள் என்றும் பதிலடி கொடுத்தார். இதையடுத்து சோசியல் மீடியாவில் மீண்டும் அதிமுக மற்றும் தவெக இடையிலான மோதல் தொடங்கியது. இந்த நிலையில் தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது.
செங்கோட்டையன் பேட்டி
அதன் காரணமாகவே இதுபோன்ற கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவின் பி டீமாக யார் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியை போல நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை. தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது.
அதிமுக தேர்தல் அறிக்கை
ஆனால் ஒவ்வொரு நாளும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள். இதன் மூலமாக அவர்கள் எவ்வளவு பெரிய தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார். விஜய் கட்சி தொடங்கிய போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பேசப்பட்டது. ஆனால் விஜய் வைத்த டிமாண்ட் காரணமாக அதிமுக பின் வாங்கியது.
அதிமுக அட்டாக் பின்னணி
இருந்தாலும் தேர்தல் நெருக்கத்தில் அதிமுக கூட்டணிக்குள் விஜய் வந்துவிடுவார் என்று எடப்பாடி பழனிசாமி எதிர்பார்த்திருந்தார். இதன் காரணமாகவே கரூர் சம்பவத்தின் போது தவெகவின் குரலாகவே எடப்பாடி பழனிசாமி செயல்பட்டிருந்தார். தற்போது தவெக அதிகளவில் வாக்குகளை பிரிப்பதால், விஜய்யை அட்டாக் செய்ய அதிமுக தொடங்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications