செங்கோட்டையனின் கேம் பிளான்.. அதிமுகவில் அடுத்த விக்கெட்.. விஜய் அடக்கி வாசிக்க இதுதான் காரணமா?
சென்னை: அதிமுகவில் இருந்து பெருந்துறை எம்எல்ஏ-வான ஜெயக்குமார் விரைவில் தவெகவுக்கு தாவ உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. செங்கோட்டையனின் தீவிர விசுவாசியான ஜெயக்குமாருக்கு இம்முறை சீட் கிடைக்காது என்று சொல்லப்படுவதால், அவரை தேர்தல் நெருங்கும் போது தவெகவில் இணைக்க செங்கோட்டையன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய் பேசுகையில், அண்ணன் செங்கோட்டையனை போல் இன்னும் பலரும் தவெகவில் இணைய உள்ளார்கள். அப்படி வருவோருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று கூறி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சு கொங்கு மண்டல தலைவர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.

ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தின் முக்கியத் தலைவரான செங்கோட்டையன் தவெகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் தவெகவில் இணைந்த பின் விஜய் கொடுத்த முக்கிய அசைன்மண்ட், அதிமுகவில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தவெக பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதுதான். அதற்கான முதல் கட்டமாகவே ஈரோடு பொதுக்கூட்டம் அமைந்துள்ளது.
இதற்கான பணிகளில் செங்கோட்டையனும் தீவிரமாக இருக்கிறார். முதற்கட்டமாக தனக்கு செல்வாக்கு அதிகமுள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுடன் செங்கோட்டையன் பேசி வருவது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் தவெக பொதுக்கூட்டம் நடந்த பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார் விரைவில் தவெக பக்கம் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
செங்கோட்டையனின் தீவிர விசுவாசிகளில் ஒருவரான ஜெயக்குமார், அதிமுக தரப்பில் மீண்டும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அவரோடு இன்னும் சிலரும் விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதனால் மீண்டும் அதிமுக தரப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்ற எண்ணத்தில் ஜெயக்குமார் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இதனால் தேர்தல் நெருங்கும் போது ஜெயக்குமார் தவெகவில் இணைவதற்கான சூழல் கனிந்து வருவதாக தவெகவினர் பேசத் தொடங்கியுள்ளனர். இதனால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மற்றொரு அதிமுக நிர்வாகியும் தவெகவில் இணைவது அக்கட்சிக்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவின் ஆதிக்கம் முடிவுக்கு வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications