"பிளாஸ்டு.. பிளாஸ்டு".. திமுக, அதிமுகவுக்கு ஷாக்.. கோவையில் தவெக செய்த தரமான சம்பவம்
கோவை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் தவெக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. கோவையை கைப்பற்ற திமுக, அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. ஆனால் அங்கும் தவெக சம்பவம் செய்துள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக, அதிமுகவுக்கு தவெக அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்றது. இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களிலும் கோவையில் அதிமுகவே வெற்றி பெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது.

கோவை அரசியல்
இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கினார். இதனால் கோவை தேர்தல் களம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி இடையே அதிகார போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக நேரடியாகவும், 3 தொகுதிகளை கூட்டணிக்கும் ஒதுக்கினார்கள். அதிமுக கூட்டணியில் கோவையின் 9 தொகுதிகளில் அவர்களும், 1 தொகுதியில் பாஜகவும் போட்டியிட்டனர். 10 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிட்டது. திமுகவுக்காக ஸ்டாலின், உதயநிதி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்
திமுக, அதிமுக சரிவு
அதிமுகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தனர். தவெகவுக்கு செங்கோட்டையனை தவிர இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. தவெக பல தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை தான் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே அவர்கள் முன்னிலை பெற்றனர்.
அதிமுக தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வேலுமணியை தவிர மற்ற அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். திமுக கோவை தெற்கு, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. செந்தில் பாலாஜியே 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். வால்பாறையில் சுதாகர், பொள்ளாச்சியில் நித்தியானந்தம் வெற்றி பெற்றனர்.
தவெக வெற்றி
தவெக சார்பில் கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், சூலூர், கிணத்துக்கடவு ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கோவையில் உள்ள 7 தொகுதிகளில் அதிமுகவுக்கு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. சென்னை, மதுரை போல கோவையின் பெரும்பாலான தொகுதிகளில் தவெக வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications