செந்தில்பாலாஜி கைதுக்கு பிறகு உதயநிதியின் முதல் கோவை விசிட்! காரில் கூட பயணித்த அந்த 3 அமைச்சர்கள்!
கோவை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று கோவைக்கு விசிட் அடித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூன்று திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்க விமான நிலையத்துக்கு பெரிய கூட்டத்தை கூட்டி மாஸ் காட்டுவார் செந்தில்பாலாஜி. சென்னையிலிருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் கோவை சென்றடைந்த உதயநிதி ஸ்டாலினை அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதனும், முத்துசாமியும் வரவேற்றார்கள்.

செந்தில்பாலாஜி இருந்திருந்தால் எப்படியொரு வரவேற்பை கொடுத்திருப்பாரோ அதே போன்றதொரு வரவேற்பை கொடுத்திருந்தார்கள் அமைச்சர்கள் சாமிநாதனும், முத்துசாமியும். அவர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார். அதில் பேசிய அவர், மணமக்கள் இந்தியா கூட்டணியை போல் ஒற்றுமையுடன், சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து கவுன்சிலர் மீனா லோகு இல்லத்துக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே திருமணம் நடைபெற்று முடிந்த மணமக்களை சந்தித்து வாழ்த்துக் கூறிவிட்டு கொடிசியாவில் நடைபெற்ற மற்றொரு திமுக நிர்வாகி இல்ல மண விழாவில் கலந்துகொண்டார். கோவையில் இந்த நிகழ்ச்சிகளை முடித்த கையோடு சாலை மார்க்கமாக பயணித்து நள்ளிரவில் சேலம் சென்றடைந்த உதயநிதி ஸ்டாலின் அங்கு ஓய்வெடுத்தார்.
பெரியார் சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கையோடு வேலூருக்கு புறப்பட்ட உதயநிதி அங்கு இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications